வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (31/07/2018)

கடைசி தொடர்பு:22:15 (31/07/2018)

`ஜூலை மாதம் வரைதான் உத்தரவு; ஆகஸ்ட்1 நிகழ்வுக்குத் தடையாம்!” - இன்னொரு `8 வழிச் சாலை’ ஆச்சர்யம்!

8 வழிச்சாலை

சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தைப் பற்றிய விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்வதற்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை தொடங்கவுள்ள நடைப்பயணத்துக்கு காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. இதற்கான காரணம்தான் தங்களை ஆச்சர்யப்படுத்துகிறது என்று சி.பி.எம் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர். 

திருவண்ணாமலயில் உள்ள அண்ணாசிலை அருகிலிருந்து நாளை காலை 9 மணிக்கு சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைப்பயணம் தொடங்கப்படும் என்றும் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் இதைத் தொடங்கிவைக்கிறார் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவந்த நிலையில், நகர போலீஸ் ஆய்வாளர் பி.சந்திரசேகரன் அந்தப் பயணத்துக்குத் தடைவிதித்துள்ளார். 

திடீரென விதிக்கப்பட்ட தடையை மீறி நடைப்பயணம் தொடங்குவது உறுதி எனும் சி.பி.எம் கட்சியினர், இன்னொரு புறம், ஜூலை 29-ம் தேதியிட்ட அந்த உத்தரவில் இருக்கும் வாசகங்களைச் சுட்டிக்காட்டி வியப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்துப் பேசிய சி.பி.எம் கட்சியின் விவசாயச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், “ தடைக்கான காரணத்தைக் கூறும் போலீஸ் உத்தரவில், இன்றுவரை அதாவது, ஜூலை 31 வரை நடைமுறையில் உள்ள காவல் சட்டம் 30(2) பிரிவு பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, நாளை தொடங்கும் பயணத்துக்குத் தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன அழகு பாருங்கள்!” என்றார். 

அவர் கூறியுள்ளதைப் போலவே, காவல்துறையின் அந்த உத்தரவு வாசகங்கள் அவ்வளவு ‘தெளிவாக’ உள்ளன. 

8 வழிச்சாலை