வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (31/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (31/07/2018)

பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகரானது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக நியமித்தது, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் 

கடந்த 2006-ம் ஆண்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதற்கிடையே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை 2008-ல் தமிழக அரசு நடத்தியது. இந்தப் பயிற்சியை 206 பேர் நிறைவு செய்தனர். இந்தநிலையில், ஆகம விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யலாம் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சி படித்த மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் `பல்வேறு போராட்டங்களைக் கடந்து, மதுரையில் உள்ள கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி!. இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை!' என்று பதிவிட்டுள்ளார்.