வெளியிடப்பட்ட நேரம்: 01:03 (01/08/2018)

கடைசி தொடர்பு:01:03 (01/08/2018)

பாடம் படிக்க பள்ளிக்கு சென்ற மாணவி.. சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம்!

கேரளாவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் சென்ற நிலையில் அவருக்கு சினிமா பாடகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவி அஸ்னா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சாதனை படைத்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தும் விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நிதித்துறை அமைச்சருமான டாக்டர்.கே.டி.தாமஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். விழா தொடங்குவதற்கு முன்பாக அந்தப் பள்ளி மாணவி அஸ்னாவுக்கு மேடையில் பாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி பாடல்களில் தேர்ச்சி பெற்றவரான மாணவி அஸ்னா, பாடல்களைப் பாடி கூட்டத்தினரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அமைச்சர் கே.டி.தாமஸ் அந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்தார். பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் அந்த மாணவியைப் பற்றி கேட்டார். அப்போது அஸ்னாவுக்கு இசையில் விருப்பம் அதிகம் இருப்பதையும், அவர் இந்துஸ்தானி இசையை விஜய் சுருஷன் என்பவரிடமும், கர்நாடக இசையை கொம்மடி ஹரீஷ் புலதாரா என்பவரிடமும், படித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மாணவி அஸ்னாவின் தந்தை சலாஹுதீன், கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தில் செக்‌ஷன் அலுவலராக இருப்பதாகவும், தாயார் டினு ஆசிரியையாக பணியாற்றி வருவதையும் சுட்டிக் காட்டினார்கள். அந்த மாணவியின் பாடும் திறமையையும் குரல் வளத்தையும் நேரில் கண்ட அமைச்சர் கே.டி.தாமஸ், திரையுலகில் உள்ள தனக்கு நெருக்கமான இசையமைப்பாளருக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்தார். 

மாணவி அஸ்னாவுக்கு திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இசையமைப்பாளர், மாணவி அஸ்னாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். அஸ்னாவை நேரில் வந்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு திரைப்பட நிறுவனம் அழைத்துள்ளது. அதனால் வெகுவிரைவில் சினிமாவில் பாட இருக்கிறார், மாணவி அஸ்னா.