சர்பத் பவுடர் என நினைத்து சாணிப் பவுடரை குடித்த மாணவர்கள்..! - திருப்பூர் தனியார் பள்ளியில் நடந்த விபரீதம்

தனியார் பள்ளி

சர்பத் பவுடர் என நினைத்து சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்த தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட கே.வி.ஆர் நகர் என்ற இடத்தில் இயங்கி வருகிறது அந்த தனியார் பள்ளி. அங்கு 12 -ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையில் இன்று காகிதப் பொட்டலம் ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்ட சக நண்பர்கள் சிலர், அந்தப் பொட்டலத்தில் இருந்ததை சர்பத் பவுடர் என நினைத்து தண்ணீரில் கலந்து குடித்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த அவர்களின் வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் கையில் இருந்த பொட்டலத்தின் கவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது சர்பத் பவுடர் என நினைத்து அந்த மாணவர்கள் குடித்தது சாணிப் பவுடர் என்பது தெரிந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த மாணவர்கள் 6 பேரையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சையளித்து வருகின்றனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பூர் மத்திய காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி செல்லும் மாணவனின் பையில் சாணிப் பவுடர் வந்தது எப்படி? மாணவர்கள் அனைவரும் தெரியாமல்தான் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கக்கூடுமா என்பவை அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!