ஜெயலலிதா ஒதுக்கிய 44 கோடி ரூபாய் எங்கே? - கொந்தளிக்கும் வீராணம் பாசன விவசாயிகள்

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி, தமிழக அளவில் புகழ்மிக்கது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சரித்திர தொன்மை வாய்ந்த இந்த ஏரியின் மூலம் பல லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வந்தது. இதனை தூர் வார மறைந்த முதல்வர் ஜெயலலிதா 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அந்த பணம் எங்கே சென்றது என இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள். 

வீராணம் ஏரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயியும் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான இளங்கீரன் ‘’வீராணம் ஏரி பல நூறு ஆண்டுகளாக தூர் வாரப்பரப்படாமலே உள்ளது. இதனால் முழுமையாக தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில்தான் 1996-2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு போவதற்கான முயற்சியில் தமிழ அரசு இறங்கியது.

இளங்கீரன் இதனை முழுமையாக தூர் வார வேண்டும் என்ற எங்களது நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. கரைகளை மட்டும் அமைத்தார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கினார். ஆனால் ஏரியை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவே இல்லை. 

இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பருவ மழைக்காலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தாலும் கூட தண்ணீரை தேக்க முடியாத அவல நிலை தொடர்ந்தது. இந்நிலையில்தான் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வீராணம் ஏரி முழுமையாக தூர் வாரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

சொன்னதுபோலவே 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் இன்று வரை இந்த ஏரி பரிதாப நிலையிலேயே உள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. தமிழக அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது” என கொந்தளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!