பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் பணிந்தது புதுச்சேரி அரசு!

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் பணிந்தது புதுச்சேரி அரசு.

பாஜக

30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக்கொள்வதற்கு விதி உள்ளது. அதன்படி, புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமிப்பது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு எம்.எல்.ஏ-க்களை நியமிக்கவில்லை. அதனால், மத்திய பா.ஜ.க அரசு நேரடியாக புதுச்சேரி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது. இதற்கு, ஆளும் காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் நேரடியாகத்  தலையிட்டு, தனது ஆளுநர் மாளிகையில் அந்த மூன்று பேருக்கும் ரகசிய பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . 

புதுச்சேரி அரசு

அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில், நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரையும் புதுச்சேரி அரசு சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கும் என எதிர்பார்ப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக, உச்ச நீதிமன்றம் இப்படியான தீர்ப்பை வழங்கக்கூடும் என்று நினைத்த புதுச்சேரி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த அனுமதி வாங்கப்பட்ட ஜூலை 27-ம் தேதிக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்க நினைத்தது. ஆனால், புதுச்சேரி அரசின் திட்டத்தை உணர்ந்த ஆளுநர் கிரண்பேடி, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால், பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் கடந்த 19-ம் தேதி பேரவையை ஒத்திவைத்தனர். அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நியமன எம்.எல்.ஏ-க்கள்  மூன்று பேரையும் சட்டமன்றத்துக்குள் அனுமதித்து, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற புதுச்சேரி அரசை வலியுறுத்தினார்.

இந்நிலையில்,  உச்ச நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், மூன்று பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களையும் இன்று நடைபெற இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதத்தை மூன்று நியமன   எம்.எல்.ஏ-க் களுக்கும்  அனுப்பியுள்ள சட்டமன்றச் செயலர் வின்சென்ட் ராயர், நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புக்கு இணங்க இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க அழைக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வந்த நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் தற்காலிகமாக முடிவுக்குவந்துள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!