வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (01/08/2018)

கடைசி தொடர்பு:10:03 (01/08/2018)

ஆக்ரோஷமான கலீம்... அமைதியான மாரியப்பன்..! – தேனி வந்த கும்கி யானைகள்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க, வனத்துறை சார்பில் பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களாக, இரவு நேரங்களில் மட்டும் உலா வரும் ஒற்றைக் காட்டுயானையால், தேவாரம் பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், அந்த ஒற்றை யானையைப் பிடித்து வேறு வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். அதன் அடிப்படையில் கடந்த 30-ம் தேதி, பொள்ளாச்சியிலிருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. மேலும் ஒரு கும்கி யானை வரும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாரியப்பன் என்ற கும்கி யானை தேவாரம் வந்தடைந்தது. இரு கும்கி யானைகளும் தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கும்கி யானைகள் பற்றி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கலீம் கும்கி யானைக்கு வயது 52. மிகவும் ஆக்ரோஷமானது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா வரை சென்று காட்டுயானைகளைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்துவருகிறது. மாரியப்பன், முதுமலை முகாமில் பிறந்தது, பின்னர் சமயபுரம் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது. வயது வந்ததும் மீண்டும் முகாமுக்குக் கொண்டுவந்தார்கள். பின்னர், கும்கியாக பழக்கப்படுத்தியுள்ளார்கள். மாரியப்பனுக்கு 25வயது. பார்க்க அமைதியாக இருக்கும். கோபம் வந்தால் காட்டு யானையைக் கபளீகரம் செய்துவிடும்” என்றார்.

ஒற்றைக் காட்டு யானையைப் பிடிக்கும் ஆபரேஷன் எப்போது துவங்கும் என்று கேட்டபோது, “ கும்கி யானைகள் இங்கிருக்கும் சூழலுக்குப் பழக வேண்டும். அதற்காக 2 நாள்கள் எடுத்துக்கொள்ளும். அதன்பிறகுதான் ஒற்றைக் காட்டுயானையைப் பிடிப்போம். கும்கி யானைகளோடு இரண்டு டிராக்கர்கள் பொள்ளாச்சியில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள், யானையின் வழித்தடத்தை ஆய்வு செய்துவருகிறார்கள். விரைவில், ஒற்றைக் காட்டுயானையைப் பிடித்துவிடலாம்” என்றார்.