வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (01/08/2018)

கடைசி தொடர்பு:10:49 (01/08/2018)

தனுஷ்கோடி கடற்கரையில் கிடந்த 5,600 டெட்டனேட்டர் குப்பிகள்! கடத்த முயன்ற 6 பேர் சிக்கினர்

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர் குப்பிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக  ஆறு பேரை கைதுசெய்து, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் சிக்கிய டெட்டனேட்டர் குப்பிகள் 

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் இருந்து போதை மாத்திரைகள், பீடி பண்டல்கள், கஞ்சா, கடல் அட்டை, ரசாயன உரங்கள், வெடிபொருள்கள் ஆகியன கடத்தப்படுவது தொடர்சியாக நடந்துவருகிறது. இதனிடையே, கடந்த ஜுன் மாதம் 25-ம் தேதி, தங்கச்சிமடத்தில் இலங்கைப் போராளி இயக்கத்தினால் 30 ஆண்டுகளுக்கு முன் பதுக்கிவைக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்கள், தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

ராமேஸ்வரத்தில் இருந்து டெட்டனேட்டர் கடத்த முயன்றவர்கள்
 

இந்நிலையில், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு டெட்டனேட்டர்கள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், தனுஷ்கோடி சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள மீனவர் குடியிருப்பை ஒட்டியுள்ள சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு பதுங்கியிருந்த சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அவர்களிடம் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5,600 டெட்டனேட்டர் குப்பிகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக, ராமேஸ்வரத்தில் வசித்துவரும் பச்சைமால் நாகேஸ், மகாநிதி, முகம்மது முஸ்ஸம்பில், சுப்பிரமணியன், நம்புசெல்வம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரவி ஆகிய ஆறு பேரை கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கடலில் உள்ள மீன்களை மொத்தமாகப் பிடிப்பதற்காக ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்துகளை மீனவர்கள் பயன்படுத்துவது வழக்கம். இதனால், தற்போது பிடிபட்ட டெட்டனேட்டர் குப்பிகள் இலங்கைக்குக் கடத்துவதற்காக வாங்கி வரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.