டி.டி.வி.தினகரன் வீட்டைப் பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார்! | police security in dinakaran house

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (01/08/2018)

கடைசி தொடர்பு:13:37 (01/08/2018)

டி.டி.வி.தினகரன் வீட்டைப் பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார்!

சென்னை அடையாறில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு, காஞ்சிபுரம் நகரச் செயலாளரான புல்லட் பரிமளம் என்பவர், தினகரனின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில், நான்கு பேர்மீது தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினகரன் வீடு, பெட்ரோல் குண்டு

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், `புல்லட்’ பரிமளம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் காஞ்சிபுரம் நகரச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். இவரை, ஜூலை 27-ம் தேதி கட்சியிலிருந்து நீக்கி, துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்தார். மேலும், பரிமளம் வகித்த பதவிக்குப் புதிய பொறுப்பாளரையும் நியமித்தார். இதனால் ஆத்திரமடைந்த `புல்லட்' பரிமளம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டு முன்பு, தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, தினகரனைப் பார்க்க அவருடைய வீட்டுக்குள் நுழைய முயன்றார். ஆனால், தினகரனின் கார் டிரைவர் பாண்டித்துரை உள்ளிட்டோர், பரிமளத்தை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறிய `புல்லட்' பரிமளம், தன் காரில் தயாராக வைத்திருந்த தினகரனின் உருவ பொம்மையை, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, காரில் இருந்த பெட்ரோல் கேனில் தீ பரவியது.  இதனால், தினகரனின் கார் டிரைவர் உள்ளிட்ட நான்குபேர் தீக்காயமடைந்தனர்.

தினகரன் வீடு, போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான புல்லட் பரிமளத்தை அடையாறு காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க வேண்டும் என தினகரன் சார்பாக காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, இன்று முதல் தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.