வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (01/08/2018)

கடைசி தொடர்பு:13:11 (01/08/2018)

‘ஒருங்கிணைந்து செல்வதில்லை!’- பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு சரமாரி புகார்

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிலைக்கடத்தல்

சிலைக் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள், புகார்கள் ஆகியவற்றை சிபிஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், ''உங்கள் காவல்துறையினர்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டனர். 

அதற்குப் பதிலளித்த அரவிந்த் பாண்டியன், ''தமிழக காவல்துறையினர்மீது நம்பிக்கை உள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளை காவல்துறையினர் விசாரித்து வந்தபோது, முழுமையாக விசாரணை நடைபெற்றது. கடந்த ஓராண்டுக்கு  முன்பு, சிலைக் கடத்தலில் தடுப்புப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்குகள் அந்தக் குழுவினரிடம் சென்ற பின்புதான் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. என்ன மாதிரியான விசாரணை நடைபெறுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசுடன் ஒருங்கிணைந்து செல்வதில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ-க்கு மாற்றிவிட்டால், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவை கலைக்கப்போகிறீர்களா என நீதிபதிகள் கேட்டனர்.  சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவை கலைப்பதா அல்லது அப்படியே வைத்திருப்பதா என்பதை அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், அதற்காக தனக்கு அவகாசம் வேண்டும் எனவும் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.