சேர்மன் அருணாச்சலசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (2.8.18)  கொடியேற்றத்துடன் தொடங்கி,  வரும் 13ம் தேதி வரை 12 நாள்கள் நடை பெறுகிறது. 

சேர்மன் அருணாச்சலசுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ளது சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை  திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நாளை 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 7.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.  இரவு 8 மணிக்கு கேடயச் சப்பரத்தில் அருணாச்சல சுவாமி திருக்கோயில் வலம் வருதல் நடைபெறுகிறது.

3-ம் தேதி, இரவு  மதிரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்திலும், 4-ம் தேதி இரவில் முல்லைச் சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்திலும், 5-ம் தேதி இரவில் பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 6-ம் தேதி இரவில் திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீத கிருஷ்ணன் அலங்காரத்திலும்,  7-ம் தேதி இரவில் ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்திலும், 8-ம் தேதி இரவில் தவழும் கிருஷ்ணன் கோலத்திலும், 9-ம் தேதி இரவில் வில்வச் சப்பரத்தில் ராஜ அலங்காரத்திலும், 10-ம் தேதி இரவில் சின்னச் சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி கோலத்திலும் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடி  அமாவாசையான வரும் 11-ம் தேதி மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை கற்பூர விலாசம் காட்சியும், சிறப்பு அபிசேகமும் நடை பெறுகிறது. மாலையில், இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், கற்பக பொன் சப்பரத்தில் 12-ம் தேதி காலை வெள்ளை சாத்தி தரிசனம், பகலில் பச்சை சாத்தி தரிசனம் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் நிறைவு நாளான 13-ம் தேதி காலை தாமிரபரணியில் தீர்த்தவாரி நீராடலும், பகலில் ஆலிலைச் சயன அலங்காரம், மாலையில் ஊஞ்சல் சேவை மற்றும் இரவில் திருவருள்புரியும் மங்கள தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!