டிராஃபிக் போலீஸாக மாறிய புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு குவியும் பாராட்டு !

டிராஃபிக் போலீஸாக மாறி போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

எம்.எல்.ஏ

புதுச்சேரியில்,வெப்பச்சலனம் காரணமாக நேற்று மாலை பலமான காற்றுடன் மழை பெய்தது. அதனால், அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன. சிறிது நேரத்தில் மழை விட்டுவிட்டது. அதனால், மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களில் கிளம்பினார்கள். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் ஈசிஆர் சாலை, கொக்கு பார்க் சிக்னலில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக, அங்கு நான்கு புறங்களிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ புதுச்சேரி

அப்போது, அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், தனது காரில் இருந்து உடனே இறங்கினார். அதிகப்படியான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அவர், உடனே ‘டிராஃபிக் போலீஸாக’ மாறி, போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்யும் பணியில் இறங்கினார். எம்.எல்.ஏ களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலைச் சரி செய்வதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களில் சிலர், அவருடன் உதவியாகக் களம் இறங்கினர். அதனால், அரை மணி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சகஜ நிலைக்குத் திரும்பியது. தகவலறிந்து, அங்கு டிராபிஃக் போலீஸ்  விரைந்து வந்தனர். அதன்பின்னரே அவர் அங்கிருந்து கிளம்பினார். இந்த அதிரடிச் செயலால், எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!