`நம்பி வந்தேன்...' - கொள்ளையன் வீட்டில் வேலைபார்த்த அமுதாவின் வாக்குமூலம்! 

அமுதா

சென்னையில், வீடு வாடகைக்குக் கேட்பதுபோல நடித்து, மூதாட்டியிடம் நகைகளைப் பறிக்க முயன்ற பிரபல கொள்ளையனை போலீஸார் கைதுசெய்தனர். கொள்ளையன் வீட்டில் வேலைபார்த்த இளம்பெண்ணை நேற்று போலீஸார் பிடித்துள்ளனர். 

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர், நிர்மலா. 56 வயதான இவரிடம், கடந்த 18-ம் தேதி  வீடு வாடகைக்கு வேண்டும் என்று ஒரு தம்பதியினர் வந்தனர். வீட்டை சுற்றிப்பார்த்த அந்தத் தம்பதியினர், குடிக்க தண்ணீர் கேட்டனர். உடனே சமையலறைக்குச் சென்றார் நிர்மலா. அவரைப் பின்தொடர்ந்து சென்ற நபர், நிர்மலாவை கத்தியால் குத்த முயன்றார். அந்த நபருடன் நிர்மலா போராடினார். அதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது. நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். தொடர்ந்து நிர்மலாவை கத்தியால் குத்த முயன்ற நபரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். 

மாங்காடு போலீஸார் விசாரித்ததில், அந்த நபரின் பெயர் தட்சிணாமூர்த்தி என்றும், பிரபல கொள்ளையன் என்றும் தெரியவந்தது. அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். தட்சிணாமூர்த்தியுடன் வந்த பெண்குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அந்தப் பெண் தட்சிணாமூர்த்தி வீட்டில் வேலைபார்க்கும் அமுதா என்று தெரியவந்தது. அவரை நேற்று போலீஸார் கைதுசெய்தனர். அமுதாவிடம் போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தட்சிணாமூர்த்தி  மீது ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன. அவரின் வீட்டில்தான் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதா வீட்டு வேலை செய்துவந்துள்ளார். அப்போது, வீட்டின் கஷ்ட நிலைமையை தட்சிணாமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். உடனே, உன்னுடைய பண கஷ்டத்தைப் போக்க ஒரு வழி உள்ளது என்று கூறிய தட்சிணாமூர்த்தி, வாடகைக்கு வீடு கேட்கும் திட்டத்தை அமுதாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமுதாவும் ஓகே என்றதும், போரூக்கு இருவரும் வந்துள்ளனர். நிர்மலாவிடம் தங்களை கணவன், மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு கேட்டுள்ளனர். வீட்டைப் பார்த்த பிறகு, வாடகைகுறித்தும் பேசியுள்ளனர். இந்தச் சமயத்தில்தான், நிர்மலாவைத் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடிக்க தட்சிணாமூர்த்தி முயன்றுள்ளார். அப்போது தட்சிணாமூர்த்தி சிக்கிக்கொண்டதும், அமுதா அங்கிருந்து தப்பிவிட்டார். ஆனால், தற்போது சிக்கிக்கொண்டார். தட்சிணாமூர்த்தியை `நம்பி வந்தேன், சிக்கிக்கொண்டேன்' என்று கண்ணீர்மல்க  அமுதா எங்களிடம் தெரிவித்தார்" என்றனர். 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!