தண்ணீர் இல்லாமல் தவித்த மாடுகள் கண்ணீர்  வடிக்கும் சோகம் !

லாரி டயர் வெடித்ததால் அடிமாட்டுக்குக் கொண்டுசென்ற மாடுகள், சுமார்  6 மணி நேரமாகத் தண்ணீர் , உணவு இன்றித் தவித்ததால் கண்ணீர்விட்ட காட்சி பலரையும் வருத்தப்படச் செய்தது.  

தண்ணீர்

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து நேற்றிரவு அடிமாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளாவுக்குப் புறப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை சுமார் 5.30 மணியளவில் டயர் வெடித்து, உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே நின்றது. பல மணி நேரமாகப் பழுது சரிசெய்யப்படாததால், லாரி வெகு நேரமாக நின்றுள்ளது. லாரியில் இருந்த மாடுகளுக்குத் தண்ணீரோ, உணவுகளோ கிடைக்காததால் சோர்ந்துவிட்டன. சில மாடுகளின் கண்களில் கண்ணீர் கசிந்தன. நீண்ட நேரம் உணவில்லாமல் அவை தவித்தது, பலரையும் பரிதாபப்படச்செய்தது.

இதுகுறித்து அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கேரளாவுக்குச் சென்ற லாரி, நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்ததால், மாடுகள் பசியால் கத்தியது மிகவும் வேதனையடையச் செய்தது. அடிமாட்டுக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிவந்தது தெரியவந்தது. அவற்றுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்க எந்த ஏற்பாடும் இல்லாமல் வதைக்கப்பட்டு, சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக  ஒரே இடத்தில் நின்றது மிகவும் வேதனைக்குறியது. ஒரு லாரியில் 6 மாடுகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள், 30-க்கும் மேற்பட்ட மாடுகளை ஒரு வாகனத்தில் ஏற்றி வந்தது கண்டனத்துக்குரியது. எனவே, இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!