`உடன்பிறப்புகளின் மரணம், என் மனதை இடிபோல தாக்கியது’ - மு.க.ஸ்டாலின் உருக்கம்!

''தி.மு.க தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது'' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
 

தி.மு.க தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``ஒவ்வொரு உடன்பிறப்பின் உயிர்மூச்சாகத் திகழும் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கிறார் என்று அதிர்ச்சி தாங்காமல் 21 கழகத் தோழர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து, மன அழுத்தத்தில் உடைந்துபோய் இருக்கிறேன்.

கருணாநிதியின் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன் உடன்பிறப்புகள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி, என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த உடன்பிறப்புகளின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல கருணாநிதி அவர்களின் உடல்நிலை சீராகிவருகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து உடல்நிலையைக் கண்காணித்துவருகின்றனர். 

கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே, `தலைவா வா..’ என்று எழுப்பிய அந்த உயிர்த் துடிப்பான  உணர்ச்சிமிகு முழக்கங்கள் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட உடன்பிறப்புகளால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால்கூட, அந்தச் செய்தி என் மனதை இடிபோல வந்து தாக்குகிறது என்பதை தொண்டர்கள் அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா கற்றுக்கொடுத்த, கருணாநிதியால் இன்றுவரை எந்த நிலையிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வரும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். அறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கருணாநிதிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!