வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (01/08/2018)

கடைசி தொடர்பு:15:25 (01/08/2018)

`கடையைப் மூடப்போறோம்... பிரியாணி இல்ல சார்' - ஹோட்டல் ஓனரை தாக்கிய `பாக்ஸிங்' கும்பல் 

ஹோட்டல்

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடைக்குள் நுழைந்த கும்பல், ஹோட்டல் உரிமையாளர், மேலாளர், ஊழியர்களின் முகங்களில் பாக்ஸர்களைப் போல சரமாரியாக குத்தினர். 

சென்னை விருகம்பாக்கத்தில் பிரபலமான பிரியாணி கடை செயல்பட்டுவருகிறது. இந்தக் கடைக்கு கடந்த 29-ம் தேதி இரவு 9 மணியளவில் 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் சிக்கன், மட்டன் பிரியாணி கேட்டனர். அப்போது கடையில் உள்ளவர்கள், `பிரியாணி காலியாகிவிட்டது. கடையை மூடப்போகிறோம்' என்று கூறினர். இதனால், பிரியாணி கேட்டவர்களுக்கும் கடையில் உள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கும்பல், கடையில் உள்ளவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில், சிலர் காயமடைந்தனர். 

பிறகு, கடையின் ஷட்டரை மூடி விட்டு அந்தக்கும்பல் சென்றது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதல் நடந்தபோது கடையில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆதாரமாக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வெளியான தகவலையடுத்து கடந்த 29-ம் தேதி பதற்றமான சூழல் நிலவியது. இதனால், அன்றைய தினம் இரவு சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகள் சீக்கிரமாகவே மூடப்பட்டன. அதுபோல விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடையையும் சம்பந்தப்பட்டவர்கள் மூடியுள்ளனர். அந்தச்சமயத்தில்தான் வெள்ளை நிற சட்டையும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து டிப்டாப்பாக வந்தவர்கள்தான் பிரியாணி கேட்டு ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். அவர்கள் ஊழியர்களையும் கடையின் மேலாளரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வீடியோவில் உள்ளவர்களில் சிலர் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் என்று தெரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

தாக்குதலில் காயமடைந்த ஊழியர்கள் போலீஸாரிடம், ``கடைக்குள் நுழைந்ததும் பிரியாணி கேட்டார்கள். இல்லை என்று கூறியதும் நாங்கள் யார் என்று தெரியுமா எங்களுக்கே பிரியாணி இல்லையா என்று சொல்ல, உனக்கு என்ன தைரியம் என்றபடி எங்களைத் தாக்கினர். அதை மேலாளர், உரிமையாளர் தட்டிக்கேட்டனர். அவர்களையும் அந்தக் கும்பல் தாக்கியது. எங்களைத் தாக்கியவர்கள் குடிபோதையில் இருந்தனர். பாக்ஸர் போல எங்களின் முகத்திலேயே குத்தினர். இதனால் முகத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு தையல் போடப்பட்டுள்ளது" என்றனர்.