பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து நடைப்பயணம்! கே.பாலகிருஷ்ணன் உட்பட 1000 பேர் கைது

திருவண்ணாமலையில், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சி செய்த சி.பி.எம் கட்சியினர் 1,000-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சி.பி.எம்

சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை, 170 கி.மீ தூரம் பிரசார நடைப்பயணம் செல்வதாக அறிவித்தது சி.பி.ஐ.எம். விவசாயிகள், சி.பி.ஐ.எம் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவதற்காக திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு ஒன்றுகூடினர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமையில் இந்தப் போராட்டம் நடக்க இருந்தது.

நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே, பாலகிருஷ்ணன் உட்பட அனைவரையும் கைது செய்தது போலீஸ். இதுகுறித்து தெரிவித்த சி.பி.ஐ.எம் நிர்வாகிகள், 'திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு தொடங்கி அதியந்தலில், அய்யம்பாளையம், எறையூர், செங்கம், மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துரை, தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டை, தீர்த்தமலை, முத்தானூர், அரூர், கோ-கூட்டுச்சாலை, சாமியார்புரம் கூட்டுச்சாலை, மஞ்சவாடி, சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர், வலசையூர், அயோத்தியாபட்டணம், அம்மாபேட்டை வழியாக சேலம் நகரத்தில் நிறைவடைகிறது.

இந்தச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் திருவண்ணாமலையில் ஒன்று கூடினர். அதேபோல், ஐந்து மாவட்ட சி.பி.ஐ.எம் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் ஒன்று திரண்டோம். முதலில் எங்கள் போராட்டத்துக்கு அனுமதி அளித்தது போலீஸ். அதற்குப் பிறகே இந்தப் பிரமாண்டமான ஏற்பாடுகள். முதலில் நடைப்பயணம் குறித்து ஆலோசனை செய்துவிட்டு அண்ணாசிலை முன்பு கண்டன உரை நிகழ்த்திவிட்டு நடைப்பயணம் தொடங்கலாம் என்று முடிவெடுத்தோம். அதன்படி அண்ணாசிலை முன்பு அனைவரும் ஒன்று கூடினோம். கண்டன உரை நிகழ்த்துவதற்கு முன்பே மக்கள் கூட்டம் வருவதைப் பார்த்து பயந்து போனது போலீஸ். இவ்வளவு பெரிய கூட்டத்தை போலீஸ் எதிர்பார்க்கவில்லை. உடனே போராட்டத்துக்கு வருபவர்களைத் தடுக்க அந்த அந்தச் சாலைகளில் பேரிகார்டு போட்டு அண்ணாசிலை அருகே வராத அளவுக்கு அங்காங்கே கைது செய்தனர் போலீஸார். பின்பு,  `நடைப்பயணத்துக்கு அனுமதி இல்லை. ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்துங்கள் அதுவும் ஒரு மணி நேரத்துக்கு மேல் அனுமதி இல்லை என்று போலீஸார் கூறினர். நாங்கள் கண்டன உரை நிகழ்த்திவிட்டு, அதையும் மீறி  நடைப்பயணத்தை தொடங்கினோம். 10 மீட்டர் தூரம் கூட நடக்கவில்லை. அதற்குள் எங்களைக் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்' என்று தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!