``போலீஸ் பாதுகாப்புக்காக நாடகமா?" - டி.டி.வி. தினகரன் இல்ல களேபர பின்னணி | Police protection in ttv dinakaran's adyar residence

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (01/08/2018)

கடைசி தொடர்பு:17:16 (01/08/2018)

``போலீஸ் பாதுகாப்புக்காக நாடகமா?" - டி.டி.வி. தினகரன் இல்ல களேபர பின்னணி

ரிப்போர்ட் வந்த பிறகுதான், ``அது வெடிகுண்டா? அல்லது உருவபொம்மை ஏரிப்பா? அல்லது பெட்ரோல் குண்டா? என்பது தெரியவரும். உண்மையில் அன்றையதினம் நடந்தது என்ன?'' என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் கூறுகிறார்கள்.

``போலீஸ் பாதுகாப்புக்காக நாடகமா?

டி.டி.வி.தினகரனுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுபாப்பு தர வேண்டும் என்றும் இசட் பிளஸ் பாதுக்காப்பு வேண்டும் என்றும் அவரது கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். உள்கட்சி மோதலில் டி.டி.வி.தினகரன் வீட்டு முன்பு நடந்த அசம்பாவிதம் இப்போது, இந்தப் பிரச்னையை பூதாகரமாக்கியிருக்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் நகரச் செயலாளராக இருந்தவர் `புல்லட்' பரிமளம். முன்னாள் கவுன்சிலரான இவர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் இருந்தபோதே அரசியல் அதிரடிகளுக்குப் பிரபலமானவர். ஏற்கெனவே இவர், விதவிதமான, பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய பேனர்களை வைத்து காஞ்சிபுரத்தையே கலங்கடித்தவர். உள்கட்சி பிரச்னை காரணமாக, இவரை அ.தி.மு.க-விலிருந்து ஜெயலலிதா நீக்கியபோது, போயஸ் தோட்டத்துக்கு வந்து தனது விரலை கத்தியால் கிழித்துக் கொண்டவர். டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்துவந்த பரிமளத்திற்கும், முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளுக்கும் இடையே கட்சி நிகழ்ச்சி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜூலை 27-ம் தேதி `புல்லட்' பரிமளம், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன். இதனால், அதிர்ச்சியடைந்த பரிமளம், ஜூலை 29-ம் தேதி அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு காரில் வந்தார். அவருடன் சுப்பையா என்பவரும் வந்திருந்தார்.

புல்லட் பரிமளம்

டி.டி.வி.தினகரனைப் பார்க்க வேண்டும் என்று வீட்டுக்குள் செல்லமுயன்ற பரிமளத்தை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பரிமளம் தனது காரின் டிக்கி அருகே தயார் நிலையில் வைத்திருந்த தினகரனின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதை டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த பாண்டித்துரை, டார்வின், பரமசிவம் ஆகியோர் தடுத்தனர். அப்போது திடீரென்று அந்த உருவபொம்மை பலத்த சத்தத்துடன் வெடித்தது. தீ கொளுந்துவிட்டு எரிந்தது. பரிமளத்தின் வேட்டி-சட்டையில் தீப்பிடித்துக் கொண்டதால், அவர் அலறி அடித்துக்கொண்டு ஓடினார். அவருடைய முகத்திலும், உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பரிமளம் மீது, சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் பாண்டித்துரை புகார் கொடுத்தார்.

அதில், ``தீ-க்குக் காரணமான மர்மப் பொருள் என்ன? அது வெடிகுண்டா? என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார். ``பெட்ரோல் குண்டு வெடித்ததா? அல்லது உருவபொம்மை எரிக்கப்பட்டதா? பெட்ரோல் குண்டு ஏதேனும் உருவபொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததா?'' என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பரிமளம், சுப்பையா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆரில், ``தேவை இசட் பிளஸ் பாதுகாப்பு'' என்று கட்டுரை எழுதி உள்ளனர். அதே நேரத்தில், டி.டி.வி. தினகரன் கட்சியைச் சேர்ந்த வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

தினகரன்

அதில், ``பரிமளம் செய்தது திட்டமிட்ட கொலை முயற்சி. எனவே, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் போக இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி-க்கு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது அதில், ``டி.டி.வி.தினகரன் இல்லம், கட்சித் தலைமை அலுவலகம் மற்றும் டி.டி.வி.தினகரன் செல்லுமிடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியிடமும் இதுபோன்ற ஒரு மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த `தீ' சம்பவம் ஒரு, `டிராமா' என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.

தினகரன்

இந்தச் சர்ச்சை குறித்து சென்னையில் நேற்று பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ``ஒரு டிராமா பண்ணி செக்யூரிட்டி வாங்குகிற அளவுக்கு என்னை சீப்பா நினைக்கிறீங்களா? எங்க மேல நம்பிக்கையில்லை என்றால், அங்கு நடந்ததை அந்தத் தெருவில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள். நானும் போலீஸிடம் அதைத்தான் சொல்லியிருக்கிறேன். சும்மா மிரட்டுறதுக்காகவோ, தீக்குளிக்கவோ என்றால் பிரச்னை இல்லை. ஆனால், குண்டு வெடித்தது போன்ற பயங்கரச் சத்தத்துடன் வெடித்துள்ளது. எனவேதான், வெடிகுண்டாக இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்'' என்று ஆவேசமாக பதிலளித்தார். 

இப்படி, டி.டி.வி.தினகரன் பேட்டி கொடுத்துள்ளதால் இந்தப் பிரச்னையை போலீஸார் சீரியஸாக எடுத்து விசாரித்து வருகிறார்கள். அந்தச் சம்பவத்தின்போது கைப்பற்றப்பட்ட பொருள்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி ஆய்வு நடத்தி வருகிறார்கள். அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான், ``அது வெடிகுண்டா? அல்லது உருவபொம்மை ஏரிப்பா? அல்லது பெட்ரோல் குண்டா? என்பது தெரியவரும். உண்மையில் அன்றையதினம் நடந்தது என்ன?'' என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close