வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/08/2018)

கடைசி தொடர்பு:18:00 (01/08/2018)

இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் கோரிக்கை நிராகரிப்பு! - ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி செய்தது தொடர்பாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை நேற்று கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்த வழக்கில் முத்தையா ஸ்தபதி, அறங்காவலர்கள், ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சோமாஸ்கந்தர் சிலை, காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயில்

இந்து அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதாஇந்த வழக்கில் முத்தையா ஸ்தபதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். மேலும், பழனி கோயில் முருகன் சிலை முறைகேட்டிலும் சிக்கியவர் தற்போது வீட்டுக் காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், இரட்டைத் திருமாளிகையில் உள்ள கல்தூண்கள் காணாமல் போனதாக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தொடுத்த வழக்கில், இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் ஆணையர் கவிதா நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவிதா கைது செய்யப்பட்டதால் மேலும் பல அதிகாரிகளும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இதில் சிக்குவார்கள் என்ற அச்சம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கலைக்கவும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் ஆணையர் கவிதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். கவிதாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க