`கடத்தல்காரர்களுக்கு ஆயுள் சிறை வழங்கப்படும்!' - எச்சரித்த பெரம்பலூர் நீதிபதி

`பணம் மற்றும் உடல் உறுப்புக்காகத் தனிமனிதனைக் கடத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார் பெரம்பலூர் நீதிபதி.

நீதிபதி வினோதா

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தனியார் அறக்கட்டளை மூலம் சர்வதேச மனித வணிகம் மற்றும் மனித கடத்தல் ஒழிப்பு தின விழா குரும்பலூர் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சார்பு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பாலியல் சுரண்டலுக்காகவும் உழைப்பு சுரண்டலுக்காகவும் உடலுறுப்புகள் எடுப்பதற்காகவும் மனிதர்கள் கடத்தப்பட்டு வணிகப் பொருளாக மாற்றப்படுகிறார்கள். நாம்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு சந்தேகப்படும் பட்சத்தில் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள காவல்நிலையத்திலோ அல்லது சட்டப் பணிகள் ஆணைக் குழுவிலோ புகார் மனு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2016-ம் ஆண்டில் கடத்தல் சம்பந்தமாக இந்தியா முழுவதும் 8,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் மற்றவர்களைத் துன்புறுத்தாமலும் கேலி செய்யாமலும் இருக்க வேண்டும். சட்டத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.

பின்பு நீதிபதி வினோதா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாகத் துண்டு பிரசுரங்களையும் சட்டம் சம்பந்தமாக நோட்டீஸ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!