கீழ்பவானி பாசனத்துக்காகப் பவானிசாகர் அணையில் நீர் திறப்பு..!

அணை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பிரபாகர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீரைத் திறந்து வைத்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளுக்கும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலின் இரட்டைப்படை மதகுகளுக்கும் நன்செய் பாசனத்துக்காக இன்று விநாடிக்கு 500 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் முழுக் கொள்ளளவான 2,300 கன அடி திறந்துவிடப்படும்.

அணை

முதல்போக நன்செய் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் இந்தத் தண்ணீரால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், பவானி, ஈரோடு மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் உள்ள ஆயக்கட்டு பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் வட்ட ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்ட ஆயக்கட்டு பகுதிகள் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நீரானது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை என 120 நாள்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து திறந்துவிடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!