`சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுகிறார்' - தலைமையாசிரியைக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்களின் பெற்றோர்கள் | Cuddalore people staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (01/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (01/08/2018)

`சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுகிறார்' - தலைமையாசிரியைக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்களின் பெற்றோர்கள்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை மாணவ, மாணவிகளை சாதிப் பெயர் சொல்லி திட்டுவதாகக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியைக்கும், பெற்றோர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிழவியது.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியை அனுசுயா மாணவ, மாணவிகளை சாதிப் பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாக மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவன் பிரகதீஸ்வரனை தலைமை ஆசிரியை அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துக் கேட்ட மாணவனின் பெற்றோருக்கும் தலைமை ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளியில் மாணவ மாணவிகளை வகுப்பறையில் சாதி வாரியாக பிரித்து உட்காரவைத்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது
வெளியில்தான் செல்ல வேண்டும் எனக் கூறுவதாக மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியை அனுசுயாவிடம்
கேட்டபோது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் 
மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீஸார், திட்டக்குடி தாசில்தார் சத்யன், விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

தலைமையாசிரியை உடன் பெற்றோர்கள் வாக்குவாதம்

விசாரணையில் மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியை சாதிப்பெயரை சொல்லியும், அசிங்கமாகவும் திட்டி வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவுடன் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ரவிஇது குறித்து எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் கூறுகையில், ``பள்ளித் தலைமை ஆசிரியைப் பற்றி கடந்த 3 வருடங்களாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த  மாதம் இரண்டு மாணவிகளை சாதிப் பெயர் சொல்லி அசிங்கமாக திட்டியதாக அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்துக் கேட்ட பெற்றோர்கள் மீது தலைமை ஆசிரியை அனுசுயா, குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாக  ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் தலையிட்டு சமாதானம் செய்தோம். இதேபோல் 5-ம் வகுப்பு மாணவனை தாக்கி அவர் காயமடைந்துள்ளார். இதுபற்றி கேட்ட அவர்களின் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியை தகாத வார்த்தைகள் கூறி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து அவர் மீது புகார் வந்த நிலையில் நேற்று பிரச்னை பெரிதாகி கைகலப்பு வரை சென்றுவிட்டது. மாணவர்களுக்கு பாடம் போதிக்கக் கூடிய ஆசிரியர் இப்படி நடந்துகொள்வது மிகவும் வருத்தமாக உள்ளது. இது குறித்து புகார் கொடுத்துள்ளோம். கல்வி அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்'' என்றார்.

விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வக்குமாரிடம் கேட்டபோது, ``இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை ஆகியோரிடம் விசாரணை நடத்தினேன். விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளேன்'' என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்டபோது, ``விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்து அறிக்கை கொடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர், விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார் ஆகியோரை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. வந்தவுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.