``இவர் பெண் சமுதாயத்துக்கே அவமானம்!"- புனிதாவை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்

புனிதா

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட மகளிர் விடுதி காப்பாளர் புனிதா இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பீளமேட்டை அடுத்துள்ள ஹோப் காலேஜ் பகுதியில் இயங்கி வந்த `தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகள் சிலரை அந்த விடுதி காப்பாளர் புனிதாவும், விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனும் கூட்டுச் சேர்ந்து தவறாக வழிநடத்த முயன்றதாக சிலதினங்களுக்கு முன்பு  குற்றாச்சாட்டு எழுந்து பரபரப்பைக் கிளப்பியது. 

'பர்த்-டே பார்ட்டி' என்ற பெயரில் மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்த புனிதா, மாணவிகள் மது மயக்கத்துக்குப் போனதும் ஜெகநாதனுக்கு வீடியோ கால் செய்து மாணவிகளிடம் கொடுத்தார் என்றும் மாணவிகள் வாங்கிப் பார்க்கையில் ஜெகநாதன் தவறான கோலத்தில் இருந்தார் என்றும் புகார் கிளம்ப… ஜெகநாதன், புனிதா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தது கோவை பீளமேடு போலீஸ். தகவலறிந்த புனிதாவும், ஜெகநாதனும் தலைமறைவாகினர்.

இந்நிலையில், கடந்த சிலதினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணற்றில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஜெகநாதன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவரும் அதேவேளையில், புனிதாவையும் வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில், விடுதி காப்பாளர் புனிதா இன்று கோவை ஜெ.எம். 6 நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த புனிதாவை நீதிபதி வரும் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த புனிதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டனக் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், புனிதாவை அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர். பெண் சமூகத்துக்கே அவமானமாக உள்ள புனிதா மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இதில் சம்பந்தபட்ட அனைவரின் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!