`ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்!’ - சென்னைப் பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட விக்னேஷ்

 பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். 

சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார். அவரிடம் ஃபேஸ்புக் மூலம் விக்னேஷ் என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியின் வீட்டில் யாருமில்லை. அப்போது அங்கு சென்றுள்ளார் விக்னேஷ். அப்போது இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். அதை மாணவிக்குத் தெரியாமல் விக்னேஷ், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். 

மறுநாள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் அந்த வீடியோவை விக்னேஷ் காண்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க 5,00,000 ரூபாய் வேண்டும் என்று மாணவியை விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவி திகைத்தார். விக்னேஷின் மிரட்டல், எல்லைமீறியது. இதனால் வேறுவழியின்றி நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். 

விசாரணைக்காக விக்னேஷ் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வீடியோ எடுத்து மிரட்டியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். விக்னேஷ், நெற்குன்றத்தைச் சேர்ந்தவர். 
சம்பந்தப்பட்ட மாணவிக்கு போலீஸார் அறிவுரை கூறினர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பள்ளி மாணவியை வீடியோ எடுத்த விக்னேஷ், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த மாணவி மூலமே விக்னேஷை விசாரணைக்கு அழைத்துவந்தோம். அதை நம்பிதான் விக்னேஷ் வந்தார். எங்களைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். முதலில் எல்லா தகவல்களையும் மறுத்த அவர், எங்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மைகளை ஒத்துக் கொண்டார். அவரிடமிருந்து புகைப்படங்கள், வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். இதுபோல விக்னேஷ், வேறு யாரையாவது மிரட்டியுள்ளாரா என்று விசாரித்துவருகிறோம். அவரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம். விக்னேஷுக்கு 21 வயதாகிறது. அவர் குறித்து விசாரித்தபோது பல தகவல் வெளியாகின" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!