பிரியாணி கடையில் தகராறு செய்தவர்கள் நீக்கம்! உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தி.மு.க-வின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

சென்னை, விருகம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் பிரியாணி கடைக்கு கடந்த 29-ம் தேதி இரவு 9 மணியளவில் 15 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள், கடைக்காரர்களிடம் இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு செய்து, கடைக்காரர்களைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அதையடுத்து, அவர்களை கட்சியிலிருந்து நீக்கி, தி.மு.க தலைமைக்  கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 'விருகம்பாக்கம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், 'விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!