கோவை மாணவி உயிரிழப்பு எதிரொலி! - பேரிடர் மீட்புப் பயிற்சியில் பொம்மையைப் பயன்படுத்த முடிவு

கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பேரிடர் மீட்புப் பயிற்சியின்போது மாடியில் இருந்து கீழே குதித்துப் பலியானார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இனி நடக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சியின்போது, பொம்மைகள் பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காலை, தேனி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்புப் பயிற்சி முன்னோட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நம்மிடம் பேசிய தீயணைப்புத்துறை அதிகாரிகள், ``வரும் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி நடைபெற இருக்கிறது. ஆபத்தான சூழலில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படி கலெக்டர் அலுவலகத்திலிருந்து எளிமையாகத் தப்பிக்க முடியும் என்று பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில், மாடியிலிருந்து கயிறு மூலம் இறங்கும் பயிற்சியில் பொம்மையைப் பயன்படுத்த இருக்கிறோம். ஏனென்றால், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பலியானது துரதிஷ்டவசமானது. அதனாலேயே பொம்மையைப் பயன்டுத்துகிறோம்" என்றனர்.

இது குறித்துப் பேரிடர் மீட்புப் பயிற்றுநர் சிலரிடம் பேசியபோது, ``பொம்மை பயன்படுத்துவது நல்ல விஷயம்தான். இருந்தபோதும், மாடியிலிருந்து கயிற்றில் பொம்மையைக் கட்டி பாதுகாப்பாக கீழிறக்கும்போது, அதை வேடிக்கை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அப்பயிற்சியில் நாமும் கலந்துகொண்டால் மட்டுமே நல்ல அனுபவம் கிடைக்கும். ஆபத்து காலங்களில் சிறப்பாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், நம்முடன் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல முடியும். முறையான பயிற்றுநர் இல்லாததே கோவை மாணவி பலியாகக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!