ஆகஸ்ட் 3-ல் தொடங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா!

புத்தகத் திருவிழா

மஞ்சள் மாநகரம் ஒரு மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது. இது ஆன்மிகத்துக்கான திருவிழா அல்ல. அறிவை வளர்க்கவும் அகத்தை செழுமைப்படுத்தவும் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கவும் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு அறிவுத் தேடலுக்கான திருவிழா. ஆம், அறிவுப் பசியில் இருப்பவர்களுக்கு இதோ அறுசுவை படைக்க வருகிறது ஈரோடு புத்தகத் திருவிழா.

சென்னை, நெய்வேலி புத்தகத் திருவிழாவுக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது ஈரோடு புத்தகத் திருவிழா. சென்னைக்கு அடுத்தபடியாக, ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கென்றே ஏராளமான புதிய நூல்கள் வெளியிடப்படும் வரலாறு உண்டு. தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்காக வாசகர்கள் வரிசை கட்டுவார்கள். ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ என்னும் அமைப்பு சார்பில் கடந்த 13 வருடங்களாக ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 14-ம் தேதி வரை மொத்தம் 12 நாள்கள் நடைபெறவிருக்கிறது. ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

புத்தகத் திருவிழா

இந்தப் புத்தகத் திருவிழாவில், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கியப் பதிப்பகங்களும் கலந்துகொள்கின்றன. இதற்காக 230-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட இருக்கின்றன. மேலும், உலகெங்கும் உள்ள தமிழ்ப் படைப்பாளர்களுடைய படைப்புகளை விற்பனை செய்வதற்கென ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’, புதிய புத்தகங்களை வெளியிட விரும்புவர்களுக்கென ‘புத்தக வெளியீட்டு அரங்கம்’, படைப்பாளிகள் வாசகர்களிடையே உரையாடுவதற்கென ‘படைப்பாளர் மேடை’ போன்றவையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கென நுழைவுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம். 

புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகத் திருவிழாவை பத்மபூஷண் விருதுபெற்ற விஞ்ஞானி சிவதாணு பிள்ளை திறந்து வைக்கிறார். 12 நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவிருக்கின்றனர். அந்தவகையில், ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்ற தலைப்பில் சுகி சிவமும், ‘புத்தகப் புரட்சி... அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், ‘சிவாஜி ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமாரும், ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே’ என்ற தலைப்பில் நடிகர் சத்யராஜ் மற்றும் ‘சினிமாயணம்’ என்ற தலைப்பில் நடிகர் பார்த்திபன் எனப் பலரும் உரையாற்ற இருக்கின்றனர்.

12 நாள் திருவிழாவுக்கு ஈரோடு தயாராகி வருகிறது. என்ன மக்களே நீங்க ரெடியா..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!