கருணாநிதி உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்த நடிகர் அஜித், கவுண்டமணி! | Actor Ajith visits Kauvery hospital to enquire about Karunanidhis health

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (01/08/2018)

கடைசி தொடர்பு:21:09 (01/08/2018)

கருணாநிதி உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்த நடிகர் அஜித், கவுண்டமணி!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜித் மற்றும் கவுண்டமணி ஆகியோர் நேரில் வந்தனர். 

அஜித்


திடீர் ரத்த அழுத்தக் குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 28-ம் தேதி அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தரப்பினர் நேரில் சென்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நேற்று உடல்நலம் விசாரித்தார். ராகுல் காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனால், தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். 

ஸ்டாலினுடன் கி.வீரமணி, கவுண்டமணி


நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். ஸ்டாலின் மருத்துவமனைக்கு வர சிறிது தாமதம் ஏற்பட்ட நிலையில், காத்திருந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரிடம் விஜய் அக்கறையாக விசாரித்துச் சென்றார். இந்த நிலையில், காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜித் நேரில் வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினிடம் அஜித் கேட்டறிந்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவுண்டமணி ஆகியோர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் கேட்டறிந்தனர்.