வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (01/08/2018)

கடைசி தொடர்பு:23:30 (01/08/2018)

கயத்தாறில் மர்மமாக இறந்த 4 மயில்கள்! - வனத்துறையினர் விசாரணை

கயத்தாறு அருகே உள்ள குளத்தில், 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தானியங்களைச் சேதப்படுத்துவதால், விஷம் கலந்த தானியங்களை வீசி மயில்களை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனரா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியப் பகுதியில் 408 குளங்கள் உள்ளன. இதில், கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் வசித்து வந்தன. கயத்தாறு சுற்று வட்டாரப் பகுதியில்தான் மயில்கள் அதிகம் வசிப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் குளங்களில் உள்ள கருவேல மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால். இங்கு வசித்து வந்த மயில்கள், குடியிருப்பைத் தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு இடம் பெயரும்போதும் தண்ணீர் தேடி சாலையைக் கடக்கும்போதும் நான்கு வழிச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு காயம் பட்டும், சில நேரங்களில் இறந்து போகவும் நேரிடுகிறது. இந்நிலையில்,  இன்று காலையில் கயத்தாறு அருகில் உள்ள சாயர்படை தாங்கி என்னும் குளத்தில் 2 பெண் மயில்கள் இறந்து கிடந்தன. அதற்கு அருகில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அப்பகுதியில் உள்ளவர்கள்  உடனே, கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். 

வன ஊழியர்கள் இறந்த மற்றும் உயிருக்குப் போராடிய மயில்களை மீட்டு கயத்தாறு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், உயிருக்குப் போராடிய  இரண்டு மயில்களும் இறந்துவிட்டன.  இந்தப் பகுதிகளில் கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் போன்ற பயிர்களையும், கொய்யா போன்ற பழமரங்களையும் விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து வருகிறார்கள். இவற்றை மயில்கள் சேதப்படுத்துவதால், மகசூலில் நஷ்டம் ஏற்படும் எனக்கருதி, விவசாயிகள் யாராவது தானியங்களில் விஷம் கலந்து வைத்தனரா? என குருமலை வனத்துறையினர் விசாரணை நடத்தி  வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில்  மட்டும் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் வாகனத்தில் அடிபட்டு விபத்தினாலும், இதுபோன்று மர்மமாகவும் உயிரிழந்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க