`ஆறுகளில் பாய்ந்தோடும் தண்ணீர்!’ - திருவையாறில் களைகட்டும் ஆடிப்பெருக்கு | People awaits Thiruvaiyaru adiperukku festival

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (01/08/2018)

`ஆறுகளில் பாய்ந்தோடும் தண்ணீர்!’ - திருவையாறில் களைகட்டும் ஆடிப்பெருக்கு

திருவையாறு

தமிழர்களின் மிகவும் முதன்மையான பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது ஆடிப்பெருக்கு. `நீரின்றி அமையாது உலகு’ என்ற வாக்குக்கு ஏற்ப தண்ணீரை தெய்வமாக மதித்து, இதை வழிபடும் விதமாக நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக காவிரி தண்ணீர் வராததால், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் முழுமையான உற்சாகத்தோடு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஆறுகளில் தண்ணீர் நிறைந்துள்ளதால் காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளார்கள்.

ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்டு 3-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் மற்றும் இவைகளின் கிளை ஆறுகள் ஓடக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும். ஆனாலும் கூட தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெறக்கூடிய ஆடிப்பெருக்கு விழா தமிழக அளவில் புகழ்மிக்கது. திருவையாறு, தஞ்சாவூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும்கூட ஏராளமானவர்கள் இங்கு வந்து ஆடிப்பெருக்கு கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். காரணம் ஐந்து ஆறுகள் ஓடக்கூடிய திருவையாறில் வழிபாடு நடத்தினால்தான் ஆடிப்பெருக்கு முழுமையடைந்ததாக மனம் நிறைவடைவார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து, ஆடிப்பெருக்கு விழாவின்போது இங்கு காவிரி நீர் நிறைந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தார்கள். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தண்ணீரின்றி வறண்டு கிடந்ததால், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் இங்கு களையிழந்து காணப்பட்டது. மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு ஆற்றின் உள்ளே போர்வெல் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் கிடைத்த தண்ணீரைக் கொண்டு மக்கள் வழிபாடு நடத்தினார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக உற்சாகமின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடிய மக்கள், இந்த ஆண்டு ஆனந்த ஆர்ப்பரிப்போடு ஆடிப்பெருக்கை கொண்டாடக் காத்திருக்கிறார்கள். கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் தற்பொழுது திருவையாறை தாலாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் இங்குள்ள மக்கள் ஆர்வத்தோடு ஆடிப் பெருக்கை எதிர்நோக்கியுள்ளார்கள்.


[X] Close

[X] Close