`மேலூர் கொலையின் பின்னணியில் சாதிய இயக்கங்கள்!’ - கடும் நடவடிக்கை எடுக்க `எவிடென்ஸ்’ கதிர் வலியுறுத்தல் | Police should control caste based movements, says Evidence Kathir

வெளியிடப்பட்ட நேரம்: 00:38 (02/08/2018)

கடைசி தொடர்பு:00:38 (02/08/2018)

`மேலூர் கொலையின் பின்னணியில் சாதிய இயக்கங்கள்!’ - கடும் நடவடிக்கை எடுக்க `எவிடென்ஸ்’ கதிர் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் மேலூரில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதிய சக்திகள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் வலியுறுத்தி இருக்கிறார். 

எவிடென்ஸ் கதிர்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன், சபரீஸ்வரன். டிரைவரான இவருக்கும் பக்கத்து ஊர் மாற்று சமூகத்தைச் சார்ந்த சிலருக்கும்  முன் விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஊரின் அருகில் சபரீஸ்வரன் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட 7-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, சபரீஸ்வரனை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தது.

சபரீஸ்வரன்

இந்த விவகாரம் நடந்த கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் `எவிடென்ஸ்’ கதிர். சபரீஸ்வரனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ள எவிடென்ஸ் கதிரிடம் சம்பம் குறித்து பேசினேன். அவர் கூறுகையில், ``'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பட்டூரில் மாற்று சாதியினர், சாதிக் கொடியை ஏற்றியுள்ளனர். சாதிக் கொடி ஏற்றினால் பிரச்னை வரும் என்று கூறி, கொடி ஏற்றியதை சபரீஸ்வரன் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு, ஆறு மாதத்துக்கு முன்பு, பட்டூரில் இளவட்டக் கல் தூக்கும் நிகழ்வு நடந்தது. அந்தக் கல்லை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் தூக்க முயற்சி செய்துள்ளனர். அதற்கு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாதியைச் சொல்லி திட்டியுள்ளனர். அந்தச் சம்பவத்துக்கும் சபரீஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்து தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்துள்ளது. இந்தநிலையில், 31-ம் தேதி மேலவளவு கிராமத்தில் மாற்று சாதியினரால் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு சபரீஸ்வரன், அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார். சபரீஸ்வரனைத் தடுத்து நிறுத்திய மாற்று சாதியைச் சேர்ந்த குணசீலன், அஜித்குமார், சுதர்சன், கார்த்திக் ஆகிய நான்கு இளைஞர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று கூறி மிரட்டியுள்ளனர். அதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அன்று மாலையில் குளிக்கச் சென்ற சபரீஸ்வரனை வழிமறித்து, குணபாலன், சுதர்சன், சரண்ராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுபோன்ற விவகாரங்களில் ஏழை, எளிய இளைஞர்களிடம் சாதி உணர்வுகளை தூண்டுகிற சாதிய இயக்கங்கள் பின்னணியில் உள்ளன. அந்தச் சாதிய இயக்கங்கள் மீது காவல்துறை, கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் சாதியத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்றார். சபரீஸ்வரனைக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய உறவினர்கள், இன்று மாலையில்தான் அவரது உடலைப் பெற்றுள்ளனர்.