வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (02/08/2018)

கடைசி தொடர்பு:08:15 (02/08/2018)

அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் மரணம் -தொடரும் திருப்பரங்குன்றம் துயரம்!

கடந்த இரண்டு வருடத்தில், இரண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் மரணமடைந்துள்ள சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எம்.எல்.ஏ ஏ.கே.போஸ்

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ்,  இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு அ.தி.மு.க தொண்டர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்களில் ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதியாகச் செயல்பட்டவர், ஏ.கே.போஸ். மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் கோஷ்டி அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தன்னுடைய பணியைச் செய்துவந்தார். எடப்பாடி அணியில் இருந்தாலும் டி.டி.வி. தினகரன் மீதும் மரியாதையுடன் இருந்தார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் வசிக்கும் ஏ.கே.போஸுக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா சீட் வழங்கவில்லை. அதற்காக அவர் கவலைப்படவில்லை. கட்சி வேலைகளைச் செய்தார். தான் எம்.எல்.ஏ-வாக இருந்த வடக்குத் தொகுதியில், ராஜன் செல்லப்பா போட்டியிட்ட நிலையில், அவருக்காகத் தேர்தல் பணியாற்றினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் வெற்றிபெற்றதைத் தெரிந்துகொள்ளாமலே சீனிவேல் மரணமடைந்தார். அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் போட்டியிட பலர் போட்டியிட்டனர். அப்போது, ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டிருந்த நேரம். ஆனால், ஏ.கே.போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரின் வெற்றிக்காக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க அமைச்சர்கள் கடுமையாக வேலைசெய்து வெற்றிபெறவைத்தனர். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். இந்த வழக்கில்தான் ஏ.கே.போஸின் தேர்தல் விண்ணப்பத்தில் வைக்கப்பட்டிருந்தது ஜெயலலிதா சுய நினைவோடு வைத்த கைரேகையா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு, அந்தக் கோணத்தில் இன்று அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உடல் பருமனால் ஏ.கே.போஸ் தேர்தலின்போதே நடக்க சிரமப்பட்டார். இதய நோயும் இருந்தது. சில மாதங்களுக்கு முன், உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார். அதனால், அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே தவிர்த்துவந்தார். ஊரில் இருக்கும் நாள்களில், தன் டிராவல்ஸ் அலுவலகத்துக்கு வந்து அமர்ந்துவிடுவார். 

 2004 -ம் ஆண்டு எம்.பி.க்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், 2006ல்தான் முதல் முறையாக திருப்பரங்குன்றம்  தொகுதி எம்.எல்.ஏ-வானார். 2011ல் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016ல் எந்தத் தொகுதியிலும் சீட் கிடைக்காதவருக்கு, சீனிவேல் மறைவால் இடைத்தேர்தலில் சீட் கிடைத்து வெற்றிபெற்றார். இந்த நிலையில், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு அஞ்சலிசெலுத்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் மதுரை வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களில், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் மரணமடைந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க