வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (02/08/2018)

கடைசி தொடர்பு:14:51 (02/08/2018)

மதுரை மேலூர் இளைஞர் படுகொலை... காரணம் சொல்லும் குடும்பத்தினர்!

எங்க அண்ணனுக்கு நடந்தது மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது -தங்கையின் கண்ணீர் !

முன்விரோதம் காரணமாக தலித் இளைஞரை மாற்றுச் சாதியினர் சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு, ஜூன் மாதம் 30-ம் தேதி, தமிழகம் மறக்க முடியாத படுகொலை சம்பவம் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு கிராமத்தில் அரங்கேறியது. அதில், தலித் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து, ஆண்டுதோறும் அந்தக் கிராமத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட சபரீஸ்வரன்

இந்நிலையில், மேலவளவு அருகே உள்ள பட்டூர் எனும் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மாற்றுச் சாதியினர் சிலர், சபரீஸ்வரன் எனும் தலித் இளைஞரைக் குடிபோதையில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினர். உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்களுடன் சபரீஸ்வரன் உயிருக்குப் போராடியுள்ளார். அதைத் தொடர்ந்து சபரீஸ்வரன் மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சப்ரீஸ்வரன் உறவினர்கள் மருத்துவமனையில் படையெடுக்கத் தொடங்கினர். தொடர்ந்து மறுநாள், சபரீஸ்வரன் படுகொலைக்கு நியாயம் கேட்டு உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மேலூர் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலையும் உருவாகியது. இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். சபரீஸ்வரனின் உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம், அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய எஸ்.பி மணிவண்ணன்,  ``குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடிவருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். இதையடுத்து, சபரீஸ்வரன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சபரீஸ்வரனின் தங்கை மணிவாசுகியிடம் பேசினோம். ``என்னுடைய இரண்டாது அண்ணன்தான் சபரீஸ்வரன். அவர், டிராக்டர் டிரைவராக இருந்தார். கடந்த செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்குக் குளிக்கப் போனார். அதன்பிறகு, அவரை மேலூர் மருத்துவமனையில் பிணமாகத்தான் பார்த்தேன். யார் என்றே தெரியவில்லை. என் அண்ணனைக் குத்திக் கொலை செய்துவிட்டுப் போய்விட்டார்கள். என் அண்ணன் ஆசையெல்லாம் நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுதான். நான், எது கேட்டாலும் எங்க வீட்டில் எனக்கு முதலில் வாங்கித் தருவது சபரீஸ் அண்ணன்தான். ஆனால், இந்தச் சம்பவம் ஒரு கனவு மாதிரி நடந்து முடிந்திருக்கிறது. என் அண்ணனுக்கு நடந்தமாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருக்க வேண்டும்'' என்றார், கதறி அழுதபடி.

கொலை

இதுதொடர்பாக, பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலு,``சபரீஸ்வரன் நல்ல பையன். அதேநேரத்தில், தவற்றை எந்தச் சாதியினர் செய்தாலும் அதை எதிர்த்துக் கேட்பான். அதுதான் அவனது உயிரை இப்போது பறித்திருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னால் சில சாதிக்காரர்கள் அவர்களின் சாதிக் கொடிமரத்தை வைக்கவந்தார்கள். அப்போது சபரீஸ்வரன், `எந்தச் சாதிக் கொடிமரங்களும் இங்கு இருக்கக் கூடாது' என்று அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான். அதனால், அந்தச் சாதியினர் அவனைப் பலி வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இதுபோல் அவனுக்கு 2- 3 முறை சில பாதிப்புகள் வந்ததாக ஊருக்குள் சில நண்பர்கள் சொன்னார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், வட மஞ்சுவிரட்டு பார்க்கப்போன சபரீஸ்வரனைச் சிலர், `உன்னைக் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டியிருக்கின்றனர். அதைப் பற்றிக் கவலைப்படாத சபரீஸ்வரன் எப்போதும் செவ்வாய்க் கிழமை குளிக்கப் போயிருக்கிறான். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது'' என்றார் சற்றே வேதனையுடன்.

முன்விரோதத்துக்காக ஓர் உயிரைக் கொலை செய்வது முட்டாள்தனம்.


டிரெண்டிங் @ விகடன்