போலீஸை விமர்சித்த வாலிபரை குவைத்தில் இருந்து இந்தியா வரவழைத்து கைது செய்த தமிழக போலீஸ்! | Man who teased police got arrested

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (02/08/2018)

கடைசி தொடர்பு:16:27 (02/08/2018)

போலீஸை விமர்சித்த வாலிபரை குவைத்தில் இருந்து இந்தியா வரவழைத்து கைது செய்த தமிழக போலீஸ்!

திருச்சியை சேர்ந்த உஷா என்ற பெண் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸாரை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளத்தில் வீடியோவை வெளியிட்ட தமிழக வாலிபரை குவைத்திலிருந்து நாடு கடத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதான சங்கரலிங்கம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் தமிழன் என்கிற சங்கரலிங்கம். இவர் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்து விட்டு குடும்பச் சுமையின் காரணமாக கடன்வாங்கிக் கொண்டு குவைத் சென்றுவிட்டார். இன்னும் வாங்கிய கடனைக்கூட அடைக்கவில்லையாம். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி ராஜா- உஷா தம்பதியினர் வந்தபோது டிராஃபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிற்காமல் அவர்கள் சென்றதால் விரட்டிச்சென்று பைக்கை எட்டி உதைத்ததில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இதையெல்லாம் வலைதளத்தில் பார்த்த சங்கரலிங்கம் போலீஸையும், தமிழக அரசையும் கண்டித்து தன்னுடைய உணர்வுகளை வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர். ஒரு வழியாக இவரின் ஃபேஸ்புக் ஐடியைக் கண்டுபித்து நேராக சங்கரலிங்கம் ஊருக்குச் சென்ற போலீஸார் பல்வேறு பொய்களைச் சொல்லி வசந்தாவிடம் விசாரணை செய்து விவரங்களைச் சேகரித்தனர். அதை வைத்துக்கொண்டு மத்திய உள்துறை, வெளியுறவு துறை மூலமாக குவைத்தில் இருந்த சங்கரலிங்கத்தை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 30-ம் தேதி குவைத்திலிருந்து திருவனந்தபுரம் வந்தவரை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் கைது குறித்து சங்கரலிங்கம் அம்மா வசந்தா பேசும்போது, `நியாயத்துக்காக மக்களின் பிரச்னைக்காகக் குரல் கொடுத்தவர். எனக்கு ஒரு பிரச்னையென்றால் நூறுகோடி மக்கள் மகனாக வருவார்கள் என்று சொன்ன மகனுக்கு, இன்றைக்கு போலீஸ் பிடியில் இருக்கிறான். யாரும் வரவில்லையே'' என்று கண்கள் தழுதழுக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க