வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:14:00 (02/08/2018)

உடல்நிலையில் முன்னேற்றம்..! சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்ட கருணாநிதி

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி, தீவிர சிகிச்சைக்குப் பின், சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. 

கருணாநிதி

திடீர் ரத்த அழுத்தக் குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 28-ம் தேதி அதிகாலை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரின் உடல்நிலைகுறித்து பல்வேறு தரப்பினர் நேரில் சென்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துவருகின்றனர்.

இன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்துச் சென்றார். இதற்கிடையில், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து, நேற்று மாலையில் ஒரு அரைமணி நேரம், அவர் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்தான் அவர் சக்கர நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டார். மேலும், சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.