கிறிஸ்டி நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக விசாரணை!

கிறிஸ்டி

தமிழக அரசின்  சமூக நலத்துறை மூலம் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருள்களை கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனம் விநியோகித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 5 ம் தேதி முதல் 10 தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், ஆலைகள், குடோன்கள், உறவினர் வீடுகள், ஆடிட்டர் வீடு என கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்றும், இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அனைவரின் கவனமும் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது.

இதைப்பற்றி வருமான வரித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ``நாங்கள் ஏற்கெனவே கடந்த மாதம் 5 ம் தேதியிலிருந்து 10 ம் தேதி வரை 5 நாள்கள் சோதனை நடத்தினோம். அதில் முக்கியமான ஆவணங்கள் சிலவற்றைச் சென்னைக்குக் கொண்டு சென்று விட்டோம்.  ஆனால், பல ஆவணங்கள் இந்த நிறுவனத்திலேயே ஓர் அறையில் வைத்து சீல் வைத்திருந்தோம். அந்த ஆவணங்களை தற்போது எடுத்து அதற்கான விளக்கங்களைக் கேட்டு விசாரித்து வருகிறோம். தற்போது நடப்பது ரெய்டு அல்ல. ஏற்கெனவே நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு விளக்கத்தைக் கேட்டு வருகிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!