வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (02/08/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்படும் - உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மே 22-ம் தேதி பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரணை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வன்முறையாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக மே 22-ம் தேதி பதிவு செய்யப்பட்ட 243 வழக்குகளை ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம்,  ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ``காவல்துறையினர் மே 22-ம் தேதி பதிவு செய்த 173 வழக்குகளில், 191 கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணையில் உள்ளது. இந்த குற்ற வழக்கு எண் 191-ல் தொடர்புடையவர்கள் தவிர வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் யாரையும் போலீஸார் கைது செய்ய மாட்டார்கள் என உத்தரவிட்டனர்.