`நேர்மையான அதிகாரிக்கு இதுதான் பரிசா?'- பொன்மாணிக்கவேலுக்காக பரிந்துபேசும் சீமான்

``சிலைக் கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனத் தமிழக அரசு சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரியது வெட்கக்கேடான செயல். நேர்மையான அதிகாரிகளுக்குத் தமிழக அரசு கொடுக்கும் பரிசு இதுதானா?'' என்று கொந்தளித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான்

கடந்த வருடம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது, இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோரை அவதூறாகப் பேசியதாகவும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும் தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜரானார். வழக்கின் நகலை சீமானிடம் வழங்கிய நீதிமன்ற நடுவர் மதிவாணன், வழக்கு விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், ``எதிர்க்கட்சிகளின் போராட்டங்களைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது. மக்களின் பிரச்னைகளுக்காக போராடுபவர்களை மக்களிடம் இருந்து துண்டிக்கும் வகையில் பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றத்துக்கு அலையவிடுகிறார்கள். மக்களின் பிரச்னைகளுக்காக நடத்தப்படும் போராட்டகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மக்களின் பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என அவசியம் இல்லை. அந்தந்த கட்சிகளின் கொள்கைப்படி தனித்தனியாகப் போராட்டங்கள் நடத்துவது சரியான முடிவே. நீதிமன்றம் அறிவுறுத்தியும் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க வெற்றி பெறாது என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை. மக்களுக்காக கட்சி நடத்துகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். எங்களுடன் சேர்ந்துகொள்ளும் கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் 

அனைத்து நாசகார திட்டங்களும் தமிழகத்தை நோக்கிப் படையெடுக்க காரணம் அதை எதிர்க்கத் துணிவில்லாத அரசு இருப்பதால்தான். இதன் மூலம் தமிழகத்தை குப்பைத் தொட்டியாக மாற்றத் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது எனக் குற்றம் சாட்டியதோடு, சிலைக் கடத்தல் வழக்கில், பொன்.மாணிக்கவேல் விசாரணையில் முக்கிய நபர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு எனக் கண்டறியப்பட்டதால் அந்த விசாரணையை முடக்கி சி.பி.ஐ விசாரணையைக் கோருவது கேவலமான விஷயம். வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது கேவலமானது. உடனே தமிழக அரசு பதவி விலக வேண்டும் எனக் கொந்தளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!