வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (02/08/2018)

``அந்தப் பக்கம் வெள்ளம்... இங்க வறட்சி!” - காவிரியை இஷ்டத்துக்கும் வளைக்கும் அரசு

விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறந்து பலநாள்களாகியும் டெல்டா மாவட்டங்களில் பலநூறு கிராமங்களில் இன்றுவரை காவிரிநீர் எட்டிப்பார்க்கவில்லை. இதற்குக் காரணம் அரசுதான்

``அந்தப் பக்கம் வெள்ளம்... இங்க வறட்சி!” - காவிரியை இஷ்டத்துக்கும் வளைக்கும் அரசு

வளமான பூமி தண்ணீரின்றி பாலைவனமாக மாறி வருகிறதென தமிழக விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். இந்நிலையில்தான் 7 ஆண்டுகளுக்குப்பின் இயற்கை அன்னையின் அருளால் கர்நாடக அணைகள் எல்லாம் நிரம்பியதோடு, மேட்டூர் அணையும் கொள்ளளவை எட்டியது. இதைக் கண்டு தமிழக விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். விவசாயத்திற்காக மேட்டூர் அணை திறந்து பலநாள்களாகியும் டெல்டா மாவட்டங்களில் பலநூறு கிராமங்களில் இன்றுவரை காவிரி நீர் எட்டிப்பார்க்கவில்லை. இச்சூழலில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுமார் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலந்துவிட்டதே என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  

காவிரி

கடந்த ஜுலை 19ம் தேதி மேட்டூர் அணை வரலாற்றில் முதல் முறையாகத் தமிழக முதல்வரால் திறந்துவிடப்பட்டது.  கரைபுரண்டு வந்த காவிரி நீரைக்கண்ட விவசாயிகளும், பொதுமக்களும் மனம் குளிரக் கண்டு ரசித்தனர். இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக மணல் குவாரிகள் அமைத்து விதிகளை மீறி அளவுக்கதிகமான மணலை அள்ளி விற்றனர்.  இதில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டுக் கொள்ளையடித்தனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு அருகிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீரின்றி மக்கள் தவித்து பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிகார வர்க்கம் அனைத்தையும் காவல்துறை மூலம் அடக்கியது.  

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர்.  இவ்வழக்கில் உண்மைத் தன்மை இருப்பதால் ஒரு குழுவை அமைத்து நேரில் பார்வையிட்டு விசாரணை அறிக்கை தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக் குழு வந்து கொள்ளிடம் ஆற்றைப் பார்வையிட்டால் சுமார் 50 அடி ஆழத்துக்குக் கீழ் மணல் எடுத்திருப்பது தெரிந்துவிடும். அரசே மக்களுக்குச் செய்த துரோகம் புரிந்துவிடும். இதை மூடி மறைப்பதற்காகத்தான் பாசனத் தேவையுள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட்டு, தடுப்பணைகள் இல்லாததால் கடலுக்குச் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.  இதனால் மணல் கொள்ளையிடப்பட்ட பள்ளங்கள் மறைந்துவிடும். அதே நேரத்தில் புதிய மணல் வந்து சேர்ந்துவிடும். ஆறு வறண்டவுடன் மீண்டும் கொள்ளையடிக்க ஏதுவாகும் என்பதாலேயே இப்படிச் செய்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  

டெல்டா மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இன்று வரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.  

விவசாயிகள் போராட்டம்

இதுபோல் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியத்தில் அடப்பாற்றில் தண்ணீர் வராததைக் கண்டித்து ஆற்றில் இறங்கிப் படுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது, ``அடப்பாறு பாசனத்தை நம்பி சுமார் 10 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு செய்ய நிலத்தைத் தயார்படுத்தி வைத்துள்ளோம். மேட்டூர்அணை திறந்து 12 நாள்களாகியும் இந்த ஆற்றில் தண்ணீர் வரவில்லை. ஆடு, மாடுகள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. எங்கேங்கோ கரைபுரண்டு தண்ணீர் ஓடியும், எங்கள் கண்ணீர் தீரலையே"  என்றனர்.  

பல ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் காவிரியில் தண்ணீர் வராது என்ற எண்ணத்திலேயே பணிகளை உரிய காலத்தில் முடிக்காமல் மெத்தனப் போக்கில் இருந்துவிட்டனர். திடீரென மேட்டூர்அணை திறக்கப்பட்டதும் அவசர கதியில் அணைகளின் பில்லர்களை மட்டும் எழுப்பி தரம் குறைவான வேலையைச் செய்துவிட்டனர்.  இதற்காகவே சில ஆறுகளில் தண்ணீர் விடாமல் தடை செய்துவிட்டனர்.  

இதுபற்றி காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் குரு.கோபி கணேசனிடம் பேசியபோது, காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாய்ப் போராடினோம். நமக்கு கர்நாடகம் தரவேண்டிய நீரை நீதிமன்றம் குறைத்தபோது அழுது, புலம்பினோம்.  ஆனால், இன்றைக்கு இயற்கை அன்னை அளித்த தண்ணீரைக் கொள்ளிடம் வழியாகக் கடலில் கலக்க வைக்கிறோம். கடலுக்குத் தண்ணீர் செல்ல வேண்டியது இயற்கைதான். ஆனால், இப்போது கடலில் கலப்பது காவிரி தண்ணீர் அல்ல, அது விவசாயிகளின் ரத்தம். எனவே, உடனடியாகக் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள்கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்று முடித்தார்.  

 


டிரெண்டிங் @ விகடன்