சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் விழா! அமைச்சர்கள் வருகை; பலத்த பாதுகாப்பு

அமைச்சர்கள்

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சியை அடுத்த ஓடாநிலைப் பகுதியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கின்றனர்.

ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்ட வேண்டுமென கொதித்தெழுந்து 3 போர்களில் வெற்றி பெற்ற மாபெரும் வீரன் தீரன் சின்னமலை. போரின் மூலமாக சின்னமலையை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைதுசெய்து தூக்கிலிட்டது. அந்தவகையில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்னமாக இருந்த சுந்தந்திரப் போராட்ட வீரர்தான் தீரன் சின்னமலை. அந்த மாவீரனுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கன்று அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்து வருகிறது.

அமைச்சர்கள்

அந்தவகையில், இந்தவருடம் ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யவிருக்கின்றனர். குறிப்பாக அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி வேலுமணி, கே.பி.அன்பழகன், வெ.சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் என 10 அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும், அ.தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.

அ.தி.மு.க

இவர்கள் மட்டுமல்லாது, டி.டி.வி தினகரன், பா.ம.க சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சிப் பிரமுகர் கலந்துகொள்வதால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட இருக்கின்றனர். தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!