`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது!’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி | this government afraid to face protests says suganthi

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (02/08/2018)

கடைசி தொடர்பு:17:14 (02/08/2018)

`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது!’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி

"மதியம் இரண்டு, இரண்டரை மணிக்கு ஒரு மண்டபத்தில் கொண்டு வந்துவிட்டனர். எங்கள் தோழர்கள் தயாரித்த உணவையே நாங்கள் சாப்பிட்டோம். மாலையானதும் எங்களை விடுவதா இல்லையா என்பதைக்கூட முடிவெடுக்கத் தெரியாமல் காவல்துறை குழம்பியிருந்தது."

`மக்கள் நடந்தாலே, அரசு பயப்படுகிறது!’’ `எட்டு வழிச்சாலை’ எதிர்ப்பு நடையில் கைதாகியிருக்கும் சுகந்தி

சென்னையிலிருந்து சேலம் வரையிலான எட்டு வழிச் சாலையை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்களிடமும் பெரும்பாலாக எதிர்ப்பும், ஒருசில அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆதரவும் இருந்து வருகின்றன. இந்தத் திட்டத்தை எதிர்த்துக் களமிறங்குபவர்களை அரசு உடனுக்குடன் கைது செய்துவருகிறது. சேலம் அருகேயுள்ள கிராமத்தில் இத்திட்டம் குறித்து பேசச் சென்ற வளர்மதியைக் கைது செய்தது. நீதி மன்றம் சென்று ஜாமினில் வெளியே வந்தார் வளர்மதி. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யைச் சேர்ந்த பாலபாரதியையும் காவல்துறை கைது செய்து, பின் விடுவித்தனர். 

எட்டு வழிச்சாலை

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கி, நடைப்பயணம் செல்லும் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் பயணம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, 7 ம் தேதி முடிவடைவதாகத் திட்டமிட்டிருந்தனர். எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களைச் சந்திப்பதும் இத்திட்டம் குறித்து விளக்குவதுமாக இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. அதன்படி, நேற்று திருவண்ணாமலையில் நடைப்பயணம் தொடங்கியபோது, போலீஸார் அவர்களைக் கைது செய்திருக்கின்றனர். இப்போதுவரை பலர் விடுவிக்கப்படவில்லை என்கிற செய்தியறிந்து `என்ன நடந்தது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தியிடம் கேட்டோம். 

சுகந்தி ``சென்னையிலிருந்து சேலம் வரையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் தங்களின் நிலத்தை இழக்கநேரிடும். இதையும் ஆய்வு செய்தபின்னரே சொல்கிறோம். சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் குழுக்களாகச் சென்று, விவசாயிகளிடமும் பெண்களிடமும் பேசினோம். பலரும் கண்ணீரோடு எங்களிடம் பேசினார்கள். விவசாயம் மட்டுமே பிழைப்பாகக் கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். பலரின் வீடுகளும் பறிபோகவிருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் உரையாடுவதற்காகக் கட்சி திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைப்பயணத்தை அறிவித்தது. சென்ற மாதம் 23-ம் தேதியே அனுமதி கோரும் கடிதத்தை, சென்னையில் சிபிஎம் கட்சி சார்பாக மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தந்திருந்தார். ஆனால், நடைப்பயணத்துக்கு அனுமதியில்லை என்பதை 30-ம் தேதிதான் காவல்துறை அளிக்கிறது. அதுவும் திருவண்ணாமலை சிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது. யார் அனுமதி கோரியிருக்கிறார் என்று கூடப் பார்க்கவில்லை போலும். கடைசி நேரத்தில் சொன்னால் நீதிமன்றம் செல்ல முடியாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதனால், நாங்கள் அனுமதியில்லையென்றாலும் நடைப்பயணம் செல்லும் முடிவு எடுத்தோம்.

நேற்று காலை, நடைப்பயணத்தினைத் தொடங்கி வைக்கும் விதமாக, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேசினார்கள். சுமார் இரண்டாயிரம் பேர் திரண்டியிருந்தோம். பாதிக்கப்படும் நிலையில் உள்ள விவசாயிகள் பலரும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகப் பலரை காவல்துறை மிரட்டியிருக்கிறது. அதையும் மீறி அவர்கள் வந்திருந்தனர் என்பதால் ஏராளமான காவல்துறையினர்  குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும் நடக்கத் தொடங்கினோம். உடனே காவல்துறை எங்களைக் கைது செய்தது. அந்த நேரத்தில் கடுமையான தள்ளுமுள்ளு நடந்தது. கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் கைதானோம். ஆனால், எங்களை அழைத்துச் செல்லவோ, தங்க வைப்பதற்கோ எந்த முன் ஏற்பாட்டையும் காவல்துறை எடுத்திருக்கவில்லை. எங்களை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஏற்றி சுற்றிச் சுற்றி வந்தனர்.

எட்டு வழிச்சாலை

மதியம் இரண்டு, இரண்டரை மணிக்கு ஒரு மண்டபத்தில் கொண்டு வந்துவிட்டனர். எங்கள் தோழர்கள் தயாரித்த உணவையே நாங்கள் சாப்பிட்டோம். மாலையானதும் எங்களை விடுவதா இல்லையா என்பதைக்கூட முடிவெடுக்கத் தெரியாமல் காவல்துறை குழம்பியிருந்தது. கட்சித் தலைவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக `உங்களை விடுவிக்கிறோம்... ஆனால், நடைப்பயணத்தைத் தொடரக் கூடாது' என்றனர். அதை நாங்கள் ஏற்காமல், `எங்களில் 100 அல்லது 50 பேரையாவது நடைப்பயணம் செல்ல அனுமதியுங்கள். நிச்சயம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க மாட்டோம். மக்களிடம் இதைப் பற்றி பேசியே ஆகவேண்டும்' என்று எங்களின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. மக்கள் நடந்தாலே அரசு பயப்படுகிறது என்பதையே அவர்களின் நடவடிக்கை எங்களுக்குக் காட்டியது. இப்படியே பதினொன்று மணி வரை சென்றது. அதுவரை எங்களுக்கு உணவு ஏதும் காவல்துறை தரவில்லை. நாங்கள் சென்று சாப்பிட்டு வருகிறோம் என்றாலும் விடவில்லை. மக்கள் போராட்டத்துக்காக வந்தவர்கள் நாங்கள் என்ன ஓடியா போய்விடுவோம். ஒரு வழியாக 12 மணிக்கு விடுவித்தது.

எங்களில் தேர்ந்தெடுத்த 13 பெண்கள் உட்பட 96 பேர் மட்டும் மீண்டும் நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் எங்களைக் கைது செய்த காவல்துறை, நீதிபதி முன் அழைத்துச்சென்று வேலூர் சிறையில் அடைக்கப்போவதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. எத்தனை நாள்கள் எங்களை அடைத்து வைத்தாலும், வெளிவந்த அடுத்த நிமிடமே எங்களின் நடைப்பயணத்தைத் தொடங்கி விடுவோம். ஏனென்றால், ஒரு தென்னை மரத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பதெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறை என்னவென்றால், புயலில் விழுந்த மரங்களுக்கு நூறு ரூபாய் கொடுக்க வைப்பதற்கே பெரும் போராட்டமாகிவிடும். அதனால், நிலத்தைக் கைப்பற்றிவிடுவார்கள். அதற்கு உரிய இழப்பீடு தருவதில் இழுத்தடிப்பார்கள் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களுக்கானதாக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கின்றன. எட்டு வழிச் சாலைத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும் பிரச்னை என்பதால் தொடர் போராட்டம் மட்டுமே தீர்வு" என்கிறார் உறுதியாக. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close