`விசுவாசமிக்க தொண்டர் ஏ.கே.போஸ்' - முதல்வர் பழனிசாமி புகழாரம்

``அ.தி.மு.க-வில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்வர் பழனிசாமி

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ, ஏ.கே.போஸ் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல்  ஜீவா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் இன்று அதிகாலை முதல் அஞ்சலி செலுத்திவருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அஞ்சலி செலுத்தினர் .

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர். கழகத்துக்காக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து நன்மதிப்பை பெற்று, கட்சியில் அடிப்படை உறுப்பினரில் இருந்து பல்வேறு பதவிகளை வகித்தவர். அ.தி.மு.க-வில் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர் ஏ.கே.போஸ். தன்னுடைய உழைப்பால் கட்சியில் படிப்படியாக முன்னேறியவர். அவரது இழப்பு கழகத்துக்கு பேரிழப்பாகும்'' என்று கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ``எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, மக்கள் பணியாற்றியவர், விசுவாசமிக்க தொண்டர். ஜெயலலிதாவின் நன் மதிப்பைப் பெற்றவர். மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளில் இருந்து கட்சியிலும், கழகத் தொண்டர்களிடத்திலும் நன்மதிப்பைப் பெற்றவர். 2006 திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011-ல் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இன்று மாரடைப்பால் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. மக்களின் கோரிக்கைகளை ஜெயலலிதாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேறச் செய்தவர். அதேபோல எங்களிடமும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்துவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!