250 கிலோ கஞ்சாவை கடத்திய கும்பல்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வழியாகக் காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். "போலீஸாரின் அலட்சியத்தால் கஞ்சா கடத்தல் கும்பல் அரியலூர் மாவட்டத்தை மையப்படுத்தி கடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மீன்சுருட்டி போலீஸார் அணைக்கரையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கி கும்பகோணம் வழியாக கார் ஒன்று சென்றது. பாலத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். ஆனால், எதிரில் கார் வருவதற்கு முன்பாகவே அந்த கார் வேகமாகப் பாலத்தின் உள்ளே நுழைந்தது. இதனால் இரு பக்கமும் வந்த வாகனங்கள் அப்படியே நின்றது. போலீஸார், அந்த காரின் அருகே வந்தபோது டிரைவர் காரை பூட்டிவிட்டு தப்பி ஓடினார். இதை அறிந்த போலீஸார், காரின் உள்ளே இருந்த மற்றொருவரை பிடித்தனர். பின்னர் டிக்கியைத் திறந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் 70 பாக்கெட் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் மதுரை ஒத்தக்கடையில் வசித்து வரும் சங்கர் எனத் தெரியவந்தது. தப்பியோடிய டிரைவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த மூன்று மாதத்தில் கஞ்சா கடத்துவது இரண்டாவது முறையாகும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸாரின் அலட்சியத்தால் தான் கஞ்சா கடத்தும் கும்பல் இம்மாவட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!