வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (02/08/2018)

`யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடரக் கூடாது’ - பசுமை வழிச்சாலை குறித்து மத்திய அரசு வாதம்!

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பசுமை வழிச்சாலை திட்டம் உயர்நீதிமன்றம்

சென்னை டு சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ண மூர்த்தி, பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவிகித விவசாய நிலங்களும் 10 சதவிகித வனப்பகுதியும் வருகின்றன எனச் சுட்டிகாட்டினர். மேலும், நில கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின்படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

ஆனால், அரசு நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டினர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை என வாதிட்டனர். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் `சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மேலும், அரசு அனைத்து விதிகளையும் மீறியதாக யூகத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாது. நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற முடியாது' எனத் தெரிவித்தார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.