வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (02/08/2018)

கடைசி தொடர்பு:18:38 (02/08/2018)

கவிதாவை அடுத்து சிக்குகிறாரா ஆணையர்? - அதிரும் அறநிலையத்துறை

சிலை கடத்தல் வழக்குகளைத் தமிழக அரசு சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கமிஷனர் ஜெயா கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உற்சவர் சிலை மோசடி வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் இதுவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து வந்த அனைத்து வழக்குகளையும் நேற்று சி.பி.ஐ-க்கு மாற்றி கொள்கை முடிவு எடுத்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளில் இந்நாள் மற்றும் முன்னாள் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக அளவில் கைதாவார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க அரசாணையை இன்று காலை வெளியிட்டது தமிழக அரசு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி மகாதேவன் அடங்கிய குழு விசாரித்து வந்தது. சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை வரும் 8-ம் தேதிக்குள் சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில்தான் அரசாணை வெளியாகியிருக்கிறது. சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டதற்குப் பின்னால் முக்கிய அதிகாரிகளும் அமைச்சர்களும் இருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் ஜெயா கைதாக வாய்ப்பிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார் கமிஷனர் ஜெயா. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்க உள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்