விடுதலையும் இல்லை, ரிமாண்டும் இல்லை..! கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கையாள காவல்துறை புதிய டெக்னிக்

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்ட கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 83 பேரைக் கைது செய்த காவல்துறை அவர்களை விடுதலையும் செய்யாமல் ரிமாண்டும் செய்யாமல் மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளது.

சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைப்பயணம் செல்ல திட்டமிடப்பட்டு, போலீஸிடம் அனுமதிபெற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நடைப்பயணம் தொடங்குவதற்கு முந்தையநாள் நடைப்பயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் 1-ம் தேதி காலையில் இந்தப் பயணம் தொடங்க இருந்தது. அதற்கு முன்னதாக திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு பயணத்தொடக்கமாக கண்டன உரை நிகழ்ந்தது. கண்டன உரை முடிந்ததும் நடைப்பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கி 10 மீட்டர் செல்வதற்குள், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் குண்டுகட்டாகக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. 

கைதான கே.பாலகிருஷ்ணனோ போலீஸாரிடம், `நடைப்பயணத்தை அனுமதியுங்கள் அல்லது ரிமாண்ட் செய்யுங்கள். விடுதலை செய்தால் மீண்டும் நடைப்பயணத்தை தொடர்வோம் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார். இதனால், காவல்துறையினர்  கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அனைவரையும் மண்டபத்திலேயே வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென மண்டபத்திலிருந்து வெளியேறிய கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி  உள்ளிட்ட 130 பேர் மீண்டும்  நடைப்பயணத்தைத் தொடங்கினர். உடனடியாக போலீஸார் அவர்களைக் கைதுசெய்து மீண்டும் மண்டபத்திலேயே அடைத்தனர். இந்த நிலையில், 83 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கூறுகிறது. ஆனாலும், அவர்களை ரிமாண்ட் செய்யாமலும் விடுதலை செய்யாமலும் திருவண்ணாமலை நகர் பகுதியில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தனியார் மண்டபத்திலேயே அடைத்து வைத்துள்ளது போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!