காலை, மாலை நடைப்பயிற்சி;150 கிலோ எடை குறைப்பு - 6 மாதங்களில் ’ஸ்லிம்’ ஆன காந்திமதி!

நெல்லையபப்ர் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி காலையிலும் மாலையிலும் வாக்கிங் செல்வதால் கடந்த 6 மாதத்தில் அதிரடியாக 150 கிலோ எடை குறைந்துள்ளது.  

காந்திமதி யானை

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் காந்திமதி என்ற யானை உள்ளது. 1986-ம் ஆண்டு 13 வயது குட்டியாக நெல்லையப்பர் கோயிலுக்குள் அடியெடுத்து வைத்த இந்த யானை, கோயிலின் ஆன்மிக சேவையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதுவான காந்திமதி யானை, கோயில் விழாக்களில் உள் மற்றும் வெளிப் பிராகாரம், ரதவீதிகளில் சுவாமி மற்றும் அம்பாள் பவனி செல்லும்போது பட்டம் அணிந்து முன்பாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் நடைபெறும்போது தேருக்கு முன்னதாக நடந்து செல்லும்போது பக்தர்கள் காந்திமதியிடம் ஆசி பெறுவார்கள். குழந்தைகளும் இந்த யானையிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளனர். காந்திமதி யானை கடந்த ஜனவரி 5-ம் தேதி பவானி ஆற்றுப்படுகையில் நடந்த புத்துணர்வு முகாமில் பங்கேற்றது. தமிழக அரசின் சார்பாக 48 நாள்கள் நடந்த முகாமில் பங்கேற்றபோது கால்நடை மருத்துவர்கள் காந்திமதியைப் பரிசோதித்தனர்.

அப்போது காந்திமதி யானை 4 ஆயிரத்து 550 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த எடையைக் குறைக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால் யானையைப் பராமரிக்கும் பாகன் ராம்தாஸ் மற்றும் உதவியாளர்கள் நெல்லைக்கு திரும்பியதும் எடை குறைப்புக்கான பணிகளை மேற்கொண்டனர்.  தினமும் காலையிலும் மாலையிலும் இந்த யானை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்படுகிறது. ரதவீதியை வலம் வந்து நடைப்பயிற்சி செல்லும் இந்த யானையை குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நீராட அழைத்துச் செல்கின்றனர். 

எடை குறைந்த யானை

தினமும் குறைந்தது 7 கி.மீ தூரத்துக்கு நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதால் யானையின் உடல் எடை படிப்படியாக குறையத்தொடங்கியது. அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் இருக்கிறது. அரிசி சாதம், சர்க்கரை, தேங்காய் போன்றவை வழங்குவதை குறைத்துவிட்டு பழங்களை அதிகமாக கொடுக்கத் தொடங்கினார்கள். அதனால் கடந்த 6 மாதங்களில் யானை 150 கிலோ அளவுக்கு எடை குறைந்து தற்போது 4 ஆயிரத்து 400 கிலோவாக உள்ளது.

யானையின் உடல் எடை குறைந்திருப்பது நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடை குறைந்ததால் காந்திமதி யானை தற்போது மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறது. மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும் இந்த யானைக்கு பக்தர்கள் இனிப்பு பொருள்களைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என யானையின் பாகன் ராம்தாஸ் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!