வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (02/08/2018)

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மாரிமுத்து. இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவரின் மனைவி துளசியம்மாள் மற்றும் மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, மாரிமுத்து மற்றும் அவரின் மனைவி கடலூர் மத்தியச் சிறையிலும் மகன் பிரகாஷ் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாரிமுத்து,  அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தான்  சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்பு இருந்த சொத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக ஆராயாமல் தங்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி ஜெயசந்திரன், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று பேரும் தலா 5,00,000 ரூபாய் பினைத்தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.