பேருந்தில் தங்கம் கடத்தியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்! - ரூ.3.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | DRI officials intercepted three persons and seized 11.15 kg of gold

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (02/08/2018)

கடைசி தொடர்பு:12:15 (27/11/2018)

பேருந்தில் தங்கம் கடத்தியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்! - ரூ.3.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்புள்ள தங்ககட்டிகள் ஓடும் பேரூந்திலிருந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

கடத்தல்காரர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட தங்ககட்டிகள்.

இலங்கை - இந்திய கடலோர பகுதியில் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படையினர், சுங்கத்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் பிரிவு, க்யூ பிரிவு என ஏகப்பட்ட கண்காணிப்பு பிரிவுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இவற்றை எல்லாம் கடந்து இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதும், இங்கிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையானவை கடத்தி செல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று (1.8.2018) இரவு ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் கொண்டு செல்லப்படுவதாகச் சென்னை மண்டல வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு வந்த பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். 

அப்போது, சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த பயணிகள் 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 2 பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் சிக்கியது. சிக்கிய தங்கம் பிஸ்கட் வடிவிலும் சங்கிலி மற்றும் வளையல் வடிவிலும் என சுமார் 11.15 கிலோ இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3.32 கோடி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கம் கடத்தி வந்த 3 நபர்களையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக அவர்களை சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட தங்கம், இலங்கையிலிருந்து மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும், இதைக் கடத்தி வந்த 3 பேரும் வேதாளை மற்றும் மண்டபத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.