வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (02/08/2018)

கடைசி தொடர்பு:21:40 (02/08/2018)

‘புல்லட்’ பரிமளத்தால் என் உயிருக்கு ஆபத்து! - போலீஸ் பாதுகாப்பு கோரும் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ‘புல்லட்’ பரிமளம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் காஞ்சிபுரம் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி இவரைக் கட்சியிலிருந்து நீக்கிய தினகரன், அந்தப் பதவிக்கு புதிய பொறுப்பாளரையும் நியமித்தார். இதனால் கோபமடைந்த 'புல்லட்' பரிமளம் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டு முன்பு, தனது காரை நிறுத்திவிட்டு தினகரனை பார்க்க அவரது வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால், தினகரனின் கார் டிரைவர் பாண்டிதுரை உள்ளிட்டவர்கள் புல்லட் பரிமளத்தை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஆத்திரத்தோடு வெளியேறிய 'புல்லட்' பரிமளம் தன் காரில் இருந்த தினகரன் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது காரில் இருந்த பெட்ரோல் கேன்களிலும் தீ பரவியது. இதனால் தினகரின் கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் தீக்காயம் அடைந்தனர்.

`புல்லட்’ பரிமளம்

இந்தநிலையில், இன்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ‘புல்லட்’ பரிமளத்தின் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,``கடந்த ஆறுமாதமாக கட்சிப் பணியாற்றாமல் வேறு கட்சிக்குச் செல்லும் முடிவில் இருந்தார் `புல்லட்’ பரிமளம். இதை கட்சித் தலைமைக்கு தெரிவித்ததன் பேரில் புல்லட் பரிமளத்துக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 26.7.2018 அன்று உத்தரமேரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலையில் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். அங்குள்ள சேர்களையும் எடுத்து உடைத்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தினகரன் வீட்டுக்கு எதிரே பெட்ரோல் குண்டுவீச முயன்றார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். புல்லட் பரிமளத்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளதால், எனக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க